Wednesday, March 19, 2008

மலையாள சந்தனமும், பாண்டிநாட்டு சந்தனமும்…

பங்குனி உத்திரம் - (மார்ச் - 21, 2008), தர்ம சாஸ்தா ஐயப்பன் அவதரித்த நாள்


சமீபத்தில் இங்கு பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “ஆரியங்காவு தேவஸ்தன சௌராஷ்ட்ர மஹாஜன சங்கத்தின் பொதுகாரியதரிசி, திரு. S.J.இராஜன்” அவர்கள் வாயிலாக் கேட்ட இக்கதையை ஐயன் அவதரித்த இந்த புண்ணியநாளில் நீங்களும் படிக்க இங்கே!

பிரஹலாதன் வம்சத்தில் வந்த மஹாபலி சக்ரவர்த்தி, பகவான் வேத வியாஸர், ஸ்ரீ இராம பக்த ஹநுமான், விபீணஷனாழ்வார், குரு கிருபாச்சாரியர், பகவான் பரசுராமர், துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் என்ற ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.

1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குளத்துப்புழா.

2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.








3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.



4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.

5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை - காந்தமலை.

இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார்.

பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இதற்குக் காரணம் உண்டு. இந்தக் கோயிலில் ஐயப்பன் கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார், ஐயப்பன் மணம் புரிந்த "புஷ்கலாதேவி", செளராஷ்டிர சமூகத்தில் “எல்லோருக்கும் நன்றாம் பணிதல்” என்ற வாக்கை வேதவாக்காக கொண்ட "மார்கண்டேய கோத்திரத்தில்”, பிறந்தவர்.

இதன்படி கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன் மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சிதருகிறார். மதம் பிடித்த யானையை அடக்கி அதன்மீது வேடன் ரூபத்தில் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் நீலோத்தமை மலரை ஏந்தியும், இடது கையை தரை நோக்கி காட்டியும், வலதுகாலை தரையில் வைத்தும், இடது காலில் யோக பட்டயம் தரித்தும், அம்பாள் “புஷ்கலையுடன்” அருட்காட்சியளிக்கிறார்.

நீலோத்தமை என்பது பாரிஜாத மலரை போன்ற ஒரு மலர், அதுவும் தேவலோகத்தில் கிடைக்ககூடியது. தாம் ஞானத்தின் அறிகுறியாக விளங்குவதை தெரிவிக்க அவர் தமது வலதுகாலை தரையில் வைத்து அமர்ந்துள்ளார்.

அது சரி, கட்டைப் பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு எப்போது திருமணம் நடந்தது, அதுவும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்க்கு வந்த ஒரு குலத்தில் பிறந்த பெண்ணோடு! என்ற கேள்வி எழுகிறதல்லவா? யோக நிலை மேற்கொண்ட மணிகண்டன் அவதாரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கவில்லை.வேறொரு அவதாரத்தில் சாஸ்தாவுக்குத் திருமணம் நடந்ததாகப் புராணங்களில் குறிப்பு உள்ளது.

செளராஷ்டிர சமூகத்தினரின் முக்கியத் தொழில் "நெசவு! (பட்டுநூல்காரர்) கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னருக்குப் பட்டு ஆடைகளை அவர்கள்தான் தயாரித்து அளித்து வந்தனர். அந்தக் காலத்தில் பட்டுக்கு தீட்டு இல்லை என்று அப்பேற்பட்ட ஆடைகள் அணிவதே புனிதமானது என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர வணிகர் ஒருவர் திருவிதாங்கூர் மன்னருக்காகப் பட்டு ஆடைகளைத் தயாரித்து அதை அவரிடம் கொடுக்கப்பதற்காக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். உடன், தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துச் சென்றிருந்தார்.




ஆரியங்காவு அச்சன்கோயில்




செல்லும் வழியில் ஆரியங்காவு வந்தபோது இருட்டி விட்டது. அதனால் அங்கே உள்ள கோயிலிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் புறப்படும்போது புஷ்கலை, தன் தந்தையிடம், ‘அப்பா, நான் வரவில்லை. எனக்கு இங்கே உள்ள ஸ்வாமியைத் தரிசனம் செய்துகொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. எனவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் மன்னரைச் சந்தித்து உங்கள் வணிகத்தை முடித்துக்கொண்டு வரும்போது உங்களுடன் ஊருக்கு வருகிறேன்’ என்று சொன்னாள். வணிகருக்கோ பயம் கலந்த வியப்பு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்பதாக இல்லை. பாரத்தை ஐயன் மேல் விட்டு, கோயிலின் மேல்சாந்தி (அர்ச்சகர்) யின் பொறுப்பில் மகளை விட்டு, திருவனந்தபுரம் நோக்கிப் புறப் பட்டார்.

வணிகம் முடித்து திரும்பும் வழியில் அடர்ந்த காட்டில் ஒற்றை கொம்பு யானையிடம் அவர் மாட்டிக் கொண்டார். ஒற்றை கொம்பு யானை என்பது மிகவும் ஆபத்தானது, ஆலமரத்தையே விழுதுகளோட சாய்த்துவிடும் அளவிற்க்கு சக்தி வாய்ந்தது. பயந்து போன வணிகர், ஐயப்பனிடம் ஐயனே! இக்கட்டுகளை தீர்க்கும் ஐயப்பா! இக்காட்டு யானையிடமிருந்து காப்பாயப்பா என இருகரம் உயர்த்தி கூப்பினார். சிறிது நேரத்தில் அங்கு இராஜ தேஜஸுடன் கூடிய வாலிப வேடன் ஒருவன் வந்து, அந்த யானையை எவ்வாறு வள்ளியை பயமுருத்திய யானையை தன் சைகையாலே விரூடராய் இருந்த முருகன் அடக்கினாரோ அப்படியே இவ்விளைஞனும் தன் சைகை மூலமே அடக்கி அனுப்பிவிட்டான். தன் உயிரைக் காத்த அந்த இளைஞனுக்குத் தன் கையில் இருந்த ஒரு பட்டாடையைக் அணிவித்தார் அவ்வணிகர். ஆடையை அணிந்துகொண்ட இளைஞன், ‘பெரியவரே! இந்த ஆடையில் நான் எப்படி இருக்கிறேன், சொல்லுங்கள்!’ என்று கேட்க, பட்டாடையில் கம்பீரமாகச் இராஜ தேஜஸுடன் ஜொலித்த அந்த இளைஞனைக் கண்ட வணிகர், ‘மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாயப்பா!. உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்று சொல்ல, ‘என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்று இளைஞன் திரும்பவும் கேட்க, வணிகரோ, ‘என் உயிரை, எங்கள் குலத்தைக் காப்பாற்றிய நீ என் தெய்வம், உமக்கு எது கேட்டாலும் தருவேன்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘மாப்பிள்ளை என்று என்னை சொன்னதால் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்!’ என்று அந்த இளைஞன் கேட்டான். வணிகரும், ‘சரி, அப்படியே செய்கிறேன்’ என்று உறுதியளித்தார். ‘திரும்பும் வழியில் ஆரியங்காவு கோயிலில் என்னைச் சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான். பிறகே ‘எனக்கு ஒரு மகள் இருப்பது இந்த காட்டில் திரியும் இவ்இளைஞனுக்கு எப்படி தெரிந்தது?’ என்று வியந்தார்.








மறுநாள் கோயிலுக்கு வந்த வணிகர் அங்கு தன் மகளைச் சந்திக்க முயன்றபோது அவள் எங்கும் காணவில்லை. இரவு முழுக்கத் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இரவில்கோயில் மேல்சாந்தியின் கனவில் வந்த ஐயப்பன், தன் மீது "புஷ்கலை" கொண்ட பக்தியின் காரணமாக அவளைத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். உடனடியாக நம்பூதிரி, வணிகரிடம் கனவு விஷயத்தைச் சொன்னார்.

மறுநாள் கோயில் நடைதிறந்தபோது, வணிகர் கொடுத்த அதே பட்டாடையுடன் ஐயப்பன் காட்சி கொடுக்க! மக்கள் இவ்வாடை உம்முடையது என்பதற்க்கு என்ன சாட்சி? என்று கேட்க, அதில் அவர் செய்து வைத்த விலை குறியீட்டை காட்டி தெளிவுபடுத்தினார். அதைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பின்னர் தன்னோடு ஐக்கியமான புஷ்கலாதேவிக்கு முக்தியும் கொடுத்தார் ஐயப்பன்.

தேங்காய் உருட்டுதல்...
ஆண்டுதோறும் மார்கழி மாதம் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் இந்த வைபவத்தைத் திருக்கல்யாண உற்சவமாகக் கொண் டாடுகிறார்கள். கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்து வருகிறது. இதன்படி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக திருவிதாங்கூர் தேவஸம் போர்டு (கேரள மாநில அறநிலையத்துறை) அழைப்பின்பேரில் மதுரையில் உள்ள ஆரியங்காவு தேவஸ்தான செளராஷ்டிரா மகாஜன சங்கத்தினர் (பெண்வீட்டார்) திருக்கல்யாண உற்சவத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்டு ஆரியங்காவு வந்துவிடுகிறார்கள்.


முதலில் நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். ஸ்வாமி சார்பாகப் பெண் கேட்டு தேவஸம் போர்டு அதிகாரிகள் மூன்று பணமுடிப்புகளுடன் வருவார்கள். அதேபோல் பெண் வீட்டாரான செளராஷ்டிர சமூகப் பிரமுகர்கள் “பாண்டியன் முடிப்பு” என்ற நிச்சயதார்த்த தட்டுடன் வருவர்.

இந்த நிச்சயதார்த்த வைபவம் அலங்கரிக்கப்பட்ட திருவிதாங்கூர் மன்னரின் திருவுருவப்படத்தின் முன் நடக்கும். தற்போதும் சௌராஷ்ட்ர மக்களின் திருமண-நிச்சயதார்த்த வைபவம் நடப்பது போல், மணப்பெண்வீட்டார் முதலில் மணமகன் வீட்டு பெரியவரை அமர்த்தி, பூ, பழம், சந்தனம் முதலியவற்றால் அவரை அலங்காரம் செய்து, தம் குலப்பெருமைகளை பற்றி அவரிடம் சொல்லி, பிறகு மணமகன் வீட்டார் தம் வம்சா வழிகளையும், தம் குல பெருமைகளையும் சொல்லி பெண் கேட்டு, நிச்சயம் செய்வார். பிறகு மலையாளத்து சந்தனமும், பாண்டிநாட்டு சந்தனமும் கலக்கி, நிச்சயம் செய்ததாக எல்லா மக்களுக்கும் அறிவித்து, அச்சந்தனத்தை எல்லோருக்கும் தருவர்.அது போலவே, இன்றும் இவ்விழா நடந்து வருவதும், பின்னர் இரவில் வான வேடிக்கை வெகு விமர்சையாக நடப்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுநாள் காலை ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருமணக் கோலத்தில் காட்சி தருவார்கள். அன்று மாலை ஸ்வாமி சப்பரத்தை, அம்பாள் சப்பரம் மூன்று முறை வலம் வரும். அவர்கள் எதிர் எதிரே நின்று மாலை மாற்றிக் கொள்வர். பின்னர் கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி சடங்குகள் நடக்கும். இந்த வைபவங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் நடத்தி வைப்பதுண்டு.






ஆரியங்காவு சுவாமி கோவிலின் படியை பம்பை நதி தொட்டு செல்வதை காணா கண்கோடி வேண்டும்.




ஹரிவராசனம் விச்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரண கீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!

கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ரமோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!


டிஸ்கி: படங்கள் இணையத்திலிருந்து.., மற்ற கதைகளுக்கான ஆதாரங்கள் கோவில் பதிவுகளிலும், மற்றும் பல இணைய தளங்களிலும் உள்ளன.

Thursday, January 24, 2008

குடியரசு தினம்



1993 அடுத்த வருடம் நம்ம அணிவகுப்புதான் என்று எல்லாரும் சொல்ல, இவங்கள் விடுங்க சார் ஏழாவது பசங்கள போடுவோம் என்று மெதுவாக பேச்சு மாற! ரெண்டு பேரும் பண்ணட்டுமே என்று ஆளாளாலுக்கு அள்ளிவிட.



கடைசியாக எட்டாம் (என்னோட) வகுப்பு மாணவர்கள் யோகாசனபயிற்ச்சி செய்யணூம், ஏழாம் வகுப்பு அணிவகுப்பு செய்யணும் என்று தீர்ப்பாக ஒருவழியா தப்பிச்சோம் என்று சந்தோஷத்தில் குதிக்கிறோம்.

சந்தோஷம் நிலைத்ததா? ... அடுத்த பதிவில்

Wednesday, January 16, 2008

குடியரசு தினம்

குடியரசு தினம்,

நான் 5 குடியரசு தினங்களை பள்ளியிலும்(மழலையர் பள்ளியிலும், மேல்நிலை பள்ளியிலும்), 5 குடியரசு தினங்களை தில்லியிலும் கொண்டாடியுள்ளேன்.

1992. அது ஒரு பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயம், குடியரசுதின அணிவகுப்பிற்க்காக எல்லா மாணவர்களையும் பல நாட்க்கள் முன்னதாகவே பயிற்ச்சியில் ஈடுபடுத்தினர். முதலில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லாத்தாலும், ஒவ்வொரு மாலையிலும் நன்பர்கள் வீட்டிற்க்கு சென்று படிப்பதாலும் உற்சாகமாகவே இருந்தது. ஆனால் நாளாக, நாளாக பரிட்சை பயம் வந்து வாட்ட ஆரம்பிக்க என்னுடைய பீ.டீ. மாஸ்டரிடம் கேட்டே விட்டேன். கொஞ்சம் பயந்த முகம்தான் எனக்கு , ஏதோ ஒரு தைரியத்தில் அவரிடம் "சார் இங்க நல்லா டிரில் பண்ண பாஸ் ஆயிடலாமா சார்" என்று கேட்க ஒரு விபரீதம் நடந்ததை பிறகே உணர்ந்தேன். பரசுராமர் கோபத்திற்க்கு பேர் போன அவதாரம், லக்ஷ்மணனும் கோபத்திற்க்கும் பேர்போன ஒரு அவதாரம் இவ்விருவரின் பேரும் தாங்கிய அந்த பீ.டீ. மாஸ்டர்கள், முதலில் அடக்க முயன்றவர்கள் (நான் அந்த வயதிலேயே கொஞ்சம் நன்றாக யோகாவை செய்வேன் அதனால் நான் பரசு சாரின் 'பெட்') பிறகு புரியவைத்தார்கள். எப்படியோ சரி என்று மறுபடியும் ஆரம்பித்தோம் இதே கேள்வி பலரும் கேட்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அந்த குடியரசு தின அணிவகுப்பை முடித்தனர்.

அடுத்த வருடம் எங்கள் அணிவகுப்பு நடந்ததா? அடுத்த பதிவில்...

Saturday, May 26, 2007

என்னவளே!

என்னவளே!

காலையும் மாலையும்

இரவும் பகலும்

மனமும் நினைவும்

ஊணும் உறக்கமும்

காட்சியும் பொருளும்

பிழையும் பேழையும்

எல்லாமும் இல்லாமும்

நீதான் எனக்கு நீதான்!

Friday, May 25, 2007

ஏனடி என்னவளே!

ஏனடி என்னவளே!

உன்னிடம் தோற்றால்

ஏனடி

என்னிடம் கோபிக்கிறேன்?

_______________________________________

நீ தோற்ற போது நான் அழுதேன்!

நான் தோற்ற போதோ நீ சிரித்தாயே?

ஏனடி?
________________________________________

Thursday, May 24, 2007

என்னவளே!

மாயம் செய்யாத
மாயவள்
துர்குணமற்ற
தூயவள்
என்றும் நீ
என்னவள்

Wednesday, May 02, 2007

வாராரு வாராரு அழகர் வாராரு ...

பச்சை பட்டு உடுத்தி, கள்ளழகர் கோலத்தில் இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கிய அழகர்.


யாம் பெற்ற இன்பம் உங்களுக்கும்.

படம் : நன்றி தினமலர்.

Monday, April 30, 2007

சித்திரை திருவிழா:

சித்திரை திருவிழா

கடந்த வருடம் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை தினந்தோறும் பதிவில் பதித்து வந்தேன். மிக கடினமான அலுவல் காரணமாக என்னால் இவ்வருடம் தொகுக்க முடியாமல் போனது.

ஒவ்வொரு நாளும் அம்மையும் அப்பனும் பல பல வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். ஆறாம் நாள் காலையில் பிக்ஷாடனார் கோலத்தில் வலம் வந்து தன் திருமணத்திற்க்கு நிதி சேர்த்த வைபவமும். நேற்று காலை திருமணமும், இரவு புஷ்ப்ப பல்லாக்கும், இன்று காலை தேர்திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.


துல்லியமான படங்கள் தினமலரில், சுட்டி இதோ சித்திரை திருவிழா:

Tuesday, April 17, 2007

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்

முதல் முதலில் ஒரு பதிவரின் குரலை கேட்டது என்றால் அது நம்ம கண்ணபிரான் இரவிசங்கர் தான். அப்பேற்பட்டவர், பதிவு பதிக்க அழைக்கிறார் அதுவும் அழகு பற்றிய தொடராக.

யாராவது பதிவு பதிக்க கூப்பிட்டா சட்டுன்னு சரின்னு சொல்லாம இப்படி பதிக்கவா? அப்படி பதிக்கவா? ன்னு கருத்து கணிப்பும், செல்லாத ஓட்டு போடக்கூடாதுன்னு திஸ்கி வேற. கடைசியா சரியான மாதிரி நான் மாட்ட இதோ ஒரு பதிவு மாட்டிகிச்சு.

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்.

ஆவினங்கள்
தன் கன்றோடு தன் எஜமானன் குழந்தைகளையும் காக்கும் ஆவினங்கள் அழகு.
மனித(ம்)ன் மறந்தது: பிரதியுபகாரம் காணாமல் செய்யும் நன்றி.

ஆலமர விதை
சிவப்பாய் - சிறியதாய் பிறந்த ஆலமர பழத்தினுள்ளே இருக்கும் ஆலவிதை அழகு
மனித(ம்)ன் மறந்தது: சிறிதாய் பிறப்பது குற்றமல்ல, சிறிதாய் மரிப்பது.

ஆலமர விழுது
ஏன்றோ வளர ஆரம்பித்து ஏன்றோ தரையை தொட ஊஞ்சலாடும் ஆல விழுது அழகு
மனித(ம்)ன் மறந்தது: பொருமையோடு வளர்ச்சியும் இருக்க வேண்டியதன் அவசியம்

தலையாட்டி பொம்மை
சிரிக்க வைத்து கவனத்தை ஈர்க்கும் தலையாட்டி பொம்மை அழகு
மனித(ம்)ன் மறந்தது:எல்லாவற்றையும் ஏற்க்கும் மனதும், சமநோக்கையும்

மெழுவர்த்தி
தன்னையே கரைத்து வேலையை செய்யும் மெழுவர்த்தி அழகு.
மனித(ம்)ன் மறந்தது:இருளை துடைக்க ஒண்டியாய் போராடும் மனப்பாண்மை

மரப்பெட்டி
தன்னுள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தேவைப்படும் போது தரும் மரப்பெட்டி அழகு
மனித(ம்)ன் மறந்தது: தேவையில் தரும் சேவை.
நான் அழைப்பது : ஒன்னு இல்ல ரெண்டு பிரதீப். ("மழை" பிரதீப்பும், "காற்றில் பறக்கும் காகிதம்" பிரதீப்பும்).

Monday, March 26, 2007

ஆண்மையும்! பெண்மையும்!

ஆணின் ஆண்மை


தோள் அளவை கொண்டு எடை போடாதே ஆண்மையை
அவன் அரவணைக்கும் கரங்கள் சொல்லிவிடும்


அவன் வார்த்தைகளால் அளக்க முடியாது ஆண்மையை
அவனுடைய கண்ணியமிக்க வார்ததைகளில் சொல்லும்



அவன் நட்பு வட்டத்தை கொண்டு அளவிட முடியாது
அவனுடைய குழந்தையோடிருக்கும் நன்பர்களை கொண்டு காணலாம்


பணியிடத்தில் அவனுக்கு கிடைக்கும் மரியாதையல்ல அவன் சுயமரியாதை
அவன் இல்லத்தில் கிடைக்கும் மரியாதை தான் சுயமரியாதை



அவனுடைய கடின மோதலல்ல அவன் ஆண்மை
அவனுடைய இதமான வருடலே அவன் ஆண்மை



மார்பிலிருக்கும் முடியின் அளவல்ல ஆண்மை
அந்த மார்புக்குள்ளிருக்கும் இதயத்தின் அளவு ஆண்மை



எத்தனை பெண்களால் விரும்பப் படுகிறான் என்பத்தல்ல ஆண்மை
எத்துனை உண்மையாக ஒரு பெண்ணிடம் நடக்கிறான் என்பதே ஆண்மை


அவன் தூக்கும் பளுவை கொண்டதல்ல ஆண்மை
இன்னல்களிலும் தன்னுடைய புரிதலை காட்டுவது ஆண்மை.



பெண்ணின் பெண்மை


பெண்மை அவளுடுத்தும் உடையல்ல,
அவள் தோற்றமல்ல
அவள் பிண்ணும் பிண்ணல்ல.
பெண்மை அன்பின் இருப்பிடமான இதயத்தின்
வாசல்லிருந்து(கண்கள்) உணரக்கூடியது



அவளது முகச்சாயத்தால்
அளவிடமுடியாதது பெண்மை
அவள் ஆண்மாவில் உறைந்துள்ளது
அவள் உண்மை அழகான பெண்மை


அவள் காட்டும் அக்கறை
உணர்த்துவது பெண்மை
பெண்மையின் அழகு அவள்
வயது கூட கூட அதுவும் கூடும்


மனைவியின் முதல் காதலை பெற்றவன் அதிர்ஷ்டசாலி
கணவனின் கடைசி காதலை பெற்றவள் அதனினும் அதிர்ஷ்டசாலி
முதலும் கடைசியும்மாக காதலை பெற்ற தம்பதிகள்

ஆதர்ஷ தம்பதிகள்!