
சமீபத்தில் இங்கு பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “ஆரியங்காவு தேவஸ்தன சௌராஷ்ட்ர மஹாஜன சங்கத்தின் பொதுகாரியதரிசி, திரு. S.J.இராஜன்” அவர்கள் வாயிலாக் கேட்ட இக்கதையை ஐயன் அவதரித்த இந்த புண்ணியநாளில் நீங்களும் படிக்க இங்கே!
பிரஹலாதன் வம்சத்தில் வந்த மஹாபலி சக்ரவர்த்தி, பகவான் வேத வியாஸர், ஸ்ரீ இராம பக்த ஹநுமான், விபீணஷனாழ்வார், குரு கிருபாச்சாரியர், பகவான் பரசுராமர், துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் என்ற ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.
மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.
1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குளத்துப்புழா.
2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.
3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.
4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.
5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை - காந்தமலை.
இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார்.
பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இதற்குக் காரணம் உண்டு. இந்தக் கோயிலில் ஐயப்பன் கிரஹஸ்தாஸ்ரமம் என்ற நிலையில் வீற்றிருக்கிறார், ஐயப்பன் மணம் புரிந்த "புஷ்கலாதேவி", செளராஷ்டிர சமூகத்தில் “எல்லோருக்கும் நன்றாம் பணிதல்” என்ற வாக்கை வேதவாக்காக கொண்ட "மார்கண்டேய கோத்திரத்தில்”, பிறந்தவர். இதன்படி கர்ப்பக்கிரகத்தில் ஐயப்பன் மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் காட்சிதருகிறார். மதம் பிடித்த யானையை அடக்கி அதன்மீது வேடன் ரூபத்தில் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் நீலோத்தமை மலரை ஏந்தியும், இடது கையை தரை நோக்கி காட்டியும், வலதுகாலை தரையில் வைத்தும், இடது காலில் யோக பட்டயம் தரித்தும், அம்பாள் “புஷ்கலையுடன்” அருட்காட்சியளிக்கிறார்.
நீலோத்தமை என்பது பாரிஜாத மலரை போன்ற ஒரு மலர், அதுவும் தேவலோகத்தில் கிடைக்ககூடியது. தாம் ஞானத்தின் அறிகுறியாக விளங்குவதை தெரிவிக்க அவர் தமது வலதுகாலை தரையில் வைத்து அமர்ந்துள்ளார்.
அது சரி, கட்டைப் பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு எப்போது திருமணம் நடந்தது, அதுவும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்க்கு வந்த ஒரு குலத்தில் பிறந்த பெண்ணோடு! என்ற கேள்வி எழுகிறதல்லவா? யோக நிலை மேற்கொண்ட மணிகண்டன் அவதாரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கவில்லை.வேறொரு அவதாரத்தில் சாஸ்தாவுக்குத் திருமணம் நடந்ததாகப் புராணங்களில் குறிப்பு உள்ளது.
செளராஷ்டிர சமூகத்தினரின் முக்கியத் தொழில் "நெசவு! (பட்டுநூல்காரர்) கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னருக்குப் பட்டு ஆடைகளை அவர்கள்தான் தயாரித்து அளித்து வந்தனர். அந்தக் காலத்தில் பட்டுக்கு தீட்டு இல்லை என்று அப்பேற்பட்ட ஆடைகள் அணிவதே புனிதமானது என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர வணிகர் ஒருவர் திருவிதாங்கூர் மன்னருக்காகப் பட்டு ஆடைகளைத் தயாரித்து அதை அவரிடம் கொடுக்கப்பதற்காக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். உடன், தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துச் சென்றிருந்தார்.
ஆரியங்காவு அச்சன்கோயில்
செல்லும் வழியில் ஆரியங்காவு வந்தபோது இருட்டி விட்டது. அதனால் அங்கே உள்ள கோயிலிலேயே தங்கிவிட்டனர். மறுநாள் புறப்படும்போது புஷ்கலை, தன் தந்தையிடம், ‘அப்பா, நான் வரவில்லை. எனக்கு இங்கே உள்ள ஸ்வாமியைத் தரிசனம் செய்துகொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. எனவே, நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் மன்னரைச் சந்தித்து உங்கள் வணிகத்தை முடித்துக்கொண்டு வரும்போது உங்களுடன் ஊருக்கு வருகிறேன்’ என்று சொன்னாள். வணிகருக்கோ பயம் கலந்த வியப்பு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்பதாக இல்லை. பாரத்தை ஐயன் மேல் விட்டு, கோயிலின் மேல்சாந்தி (அர்ச்சகர்) யின் பொறுப்பில் மகளை விட்டு, திருவனந்தபுரம் நோக்கிப் புறப் பட்டார்.
வணிகம் முடித்து திரும்பும் வழியில் அடர்ந்த காட்டில் ஒற்றை கொம்பு யானையிடம் அவர் மாட்டிக் கொண்டார். ஒற்றை கொம்பு யானை என்பது மிகவும் ஆபத்தானது, ஆலமரத்தையே விழுதுகளோட சாய்த்துவிடும் அளவிற்க்கு சக்தி வாய்ந்தது. பயந்து போன வணிகர், ஐயப்பனிடம் ஐயனே! இக்கட்டுகளை தீர்க்கும் ஐயப்பா! இக்காட்டு யானையிடமிருந்து காப்பாயப்பா என இருகரம் உயர்த்தி கூப்பினார். சிறிது நேரத்தில் அங்கு இராஜ தேஜஸுடன் கூடிய வாலிப வேடன் ஒருவன் வந்து, அந்த யானையை எவ்வாறு வள்ளியை பயமுருத்திய யானையை தன் சைகையாலே விரூடராய் இருந்த முருகன் அடக்கினாரோ அப்படியே இவ்விளைஞனும் தன் சைகை மூலமே அடக்கி அனுப்பிவிட்டான். தன் உயிரைக் காத்த அந்த இளைஞனுக்குத் தன் கையில் இருந்த ஒரு பட்டாடையைக் அணிவித்தார் அவ்வணிகர். ஆடையை அணிந்துகொண்ட இளைஞன், ‘பெரியவரே! இந்த ஆடையில் நான் எப்படி இருக்கிறேன், சொல்லுங்கள்!’ என்று கேட்க, பட்டாடையில் கம்பீரமாகச் இராஜ தேஜஸுடன் ஜொலித்த அந்த இளைஞனைக் கண்ட வணிகர், ‘மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாயப்பா!. உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்று சொல்ல, ‘என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்று இளைஞன் திரும்பவும் கேட்க, வணிகரோ, ‘என் உயிரை, எங்கள் குலத்தைக் காப்பாற்றிய நீ என் தெய்வம், உமக்கு எது கேட்டாலும் தருவேன்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘மாப்பிள்ளை என்று என்னை சொன்னதால் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்!’ என்று அந்த இளைஞன் கேட்டான். வணிகரும், ‘சரி, அப்படியே செய்கிறேன்’ என்று உறுதியளித்தார். ‘திரும்பும் வழியில் ஆரியங்காவு கோயிலில் என்னைச் சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான். பிறகே ‘எனக்கு ஒரு மகள் இருப்பது இந்த காட்டில் திரியும் இவ்இளைஞனுக்கு எப்படி தெரிந்தது?’ என்று வியந்தார்.
மறுநாள் கோயில் நடைதிறந்தபோது, வணிகர் கொடுத்த அதே பட்டாடையுடன் ஐயப்பன் காட்சி கொடுக்க! மக்கள் இவ்வாடை உம்முடையது என்பதற்க்கு என்ன சாட்சி? என்று கேட்க, அதில் அவர் செய்து வைத்த விலை குறியீட்டை காட்டி தெளிவுபடுத்தினார். அதைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பின்னர் தன்னோடு ஐக்கியமான புஷ்கலாதேவிக்கு முக்தியும் கொடுத்தார் ஐயப்பன்.
தேங்காய் உருட்டுதல்...
ஆண்டுதோறும் மார்கழி மாதம் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் இந்த வைபவத்தைத் திருக்கல்யாண உற்சவமாகக் கொண் டாடுகிறார்கள். கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வைபவம் நிஜ திருமணம் போல, எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்து வருகிறது. இதன்படி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக திருவிதாங்கூர் தேவஸம் போர்டு (கேரள மாநில அறநிலையத்துறை) அழைப்பின்பேரில் மதுரையில் உள்ள ஆரியங்காவு தேவஸ்தான செளராஷ்டிரா மகாஜன சங்கத்தினர் (பெண்வீட்டார்) திருக்கல்யாண உற்சவத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்டு ஆரியங்காவு வந்துவிடுகிறார்கள்.

முதலில் நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். ஸ்வாமி சார்பாகப் பெண் கேட்டு தேவஸம் போர்டு அதிகாரிகள் மூன்று பணமுடிப்புகளுடன் வருவார்கள். அதேபோல் பெண் வீட்டாரான செளராஷ்டிர சமூகப் பிரமுகர்கள் “பாண்டியன் முடிப்பு” என்ற நிச்சயதார்த்த தட்டுடன் வருவர்.
இந்த நிச்சயதார்த்த வைபவம் அலங்கரிக்கப்பட்ட திருவிதாங்கூர் மன்னரின் திருவுருவப்படத்தின் முன் நடக்கும். தற்போதும் சௌராஷ்ட்ர மக்களின் திருமண-நிச்சயதார்த்த வைபவம் நடப்பது போல், மணப்பெண்வீட்டார் முதலில் மணமகன் வீட்டு பெரியவரை அமர்த்தி, பூ, பழம், சந்தனம் முதலியவற்றால் அவரை அலங்காரம் செய்து, தம் குலப்பெருமைகளை பற்றி அவரிடம் சொல்லி, பிறகு மணமகன் வீட்டார் தம் வம்சா வழிகளையும், தம் குல பெருமைகளையும் சொல்லி பெண் கேட்டு, நிச்சயம் செய்வார். பிறகு மலையாளத்து சந்தனமும், பாண்டிநாட்டு சந்தனமும் கலக்கி, நிச்சயம் செய்ததாக எல்லா மக்களுக்கும் அறிவித்து, அச்சந்தனத்தை எல்லோருக்கும் தருவர்.அது போலவே, இன்றும் இவ்விழா நடந்து வருவதும், பின்னர் இரவில் வான வேடிக்கை வெகு விமர்சையாக நடப்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுநாள் காலை ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருமணக் கோலத்தில் காட்சி தருவார்கள்.




ஆரியங்காவு சுவாமி கோவிலின் படியை பம்பை நதி தொட்டு செல்வதை காணா கண்கோடி வேண்டும்.
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரண கீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ரமோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா! ஸ்வாமி சரணம் ஐயப்பா!
டிஸ்கி: படங்கள் இணையத்திலிருந்து.., மற்ற கதைகளுக்கான ஆதாரங்கள் கோவில் பதிவுகளிலும், மற்றும் பல இணைய தளங்களிலும் உள்ளன.
19 comments:
படங்களுடன் மிக அருமையாக ஆரியங்காவு வைபவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் சிவமுருகன்.
இப்பதிவை எழுதி முதலில் அண்ணன் குமரன் அவர்களிடம் காட்டி ஏதேனும் குறையுள்ளதா என்று கேட்டு பதித்தேன். இந்நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பதிவில் பிரச்சனையா அல்லது தமிழ்மணத்தில் பிரச்சனையா என்று தெரியவில்லை, இப்பதிவை தான் தமிழ்மணத்திற்க்கு அனுப்பினேன் ஆனால், முகப்பிலோ என்னுடைய பழைய பதிவான மருத தெரிகிறது! தெரிந்தவர்கள் சொன்னால் திருத்திக்கொள்வேன்.
அண்ணா,
//படங்களுடன் மிக அருமையாக ஆரியங்காவு வைபவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் சிவமுருகன்.//
நன்றி.
இக்கதை நல்ல அபிநயங்களுடன் திரு S.J.இராஜன் அவர்கள் சொல்ல கேட்கவேண்டும்.
அவரே இடுப்பில் கைவத்தவுடன் வேடனாகவும், யானையை விரட்டும் விரூடராகவும், எம்மை அபயம் செய்வாய் எனும் போது பாஞ்சாலியாகவும், வணிகராகவும், மேலும் ஆரியங்காவு மேல்சாந்தியாகவும் மாறுவதை கண்ட, நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
சிறு வயதில் ஒரு முறை ஆரியங்காவிற்குச் சென்று மூன்று நாட்கள் தங்கி வந்தது நிழலாக நினைவிருக்கிறது சிவமுருகன். பம்பை நதியின் குளிர்ந்த நீரில் நீராடியது, மீன்கள் கால்களை மொய்த்தது, சென்று இறங்கியவுடன் 'மதுரையிலிருந்து வந்திருக்கிறோம்' என்று சொன்னவுடன் 'சம்பந்தி ஆக்களோ?' என்று கேட்டு சௌராஷ்ட்ரர்கள் என்று உறுதியானவுடன் இலவசமாகத் தேவஸ்தான தங்குமிடத்தில் அறை கிடைத்தது என்று சில நினைவுகள். :-)
நானும் மார்க்கண்டேய கோத்திரத்தவன் தான். அதனால் ஆரியங்காவு ஐயன் எங்கள் வீட்டு மாப்பிள்ளை. :-)
படங்கள் அருமை! பதிவும் அருமை!
கண்டேன் கண்ணுக்கினியனைக் கண்டேன்!
கண்டன் மணி கண்டன் கண்டேன்!
முகர்ந்தேன் சந்தனம் முகர்ந்தேன்!
நுகர்வேன் சந்ததம் நுகர்வேன்!
ஆரியங்காவு வைபவம் அருமை சிவா!
//இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.
//
அஞ்சு அஞ்சா மனுச வாழ்வைப் பிரிச்சிக்கோ
எந்த அஞ்சில் நீயும் இருக்க தெரிஞ்சிக்கோ....
நம்ம ஐயப்பன் அப்பவே சூப்பர் ஸ்டார் தான்! :-)))
குமரன் அண்ணா,
//சிறு வயதில் ஒரு முறை ஆரியங்காவிற்குச் சென்று மூன்று நாட்கள் தங்கி வந்தது நிழலாக நினைவிருக்கிறது சிவமுருகன். பம்பை நதியின் குளிர்ந்த நீரில் நீராடியது, மீன்கள் கால்களை மொய்த்தது, சென்று இறங்கியவுடன் 'மதுரையிலிருந்து வந்திருக்கிறோம்' என்று சொன்னவுடன் 'சம்பந்தி ஆக்களோ?' என்று கேட்டு சௌராஷ்ட்ரர்கள் என்று உறுதியானவுடன் இலவசமாகத் தேவஸ்தான தங்குமிடத்தில் அறை கிடைத்தது என்று சில நினைவுகள். :-) //
அட அப்படியா? நான் இது வரை ஆரியங்காவு சென்றதில்லை! ஏன் சபரிமலைக்கும் சென்றதில்லை. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
//நானும் மார்க்கண்டேய கோத்திரத்தவன் தான். அதனால் ஆரியங்காவு ஐயன் எங்கள் வீட்டு மாப்பிள்ளை. :-)//
நீங்கள் ஒரு முறை கீதாசாம்பசிவம் அவர்கள் பதிவில் சொல்லிஇருந்தீர்கள். அம்பாள் புஷ்கலை ’T’ என ஆரம்பிக்கும் ஒரு வீட்டு பெயர்கொண்டவர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
சௌராஷ்ட்ரர்களுக்கு இந்த வருடம் ஒரு மிகப்பெரிய வருடம்! இந்த ஆரியங்காவு கோவிலும், இவ்வைபவமும் அதற்க்கு ஒரு முக்கிய பங்குள்ளது, அதி விரைவில் அதைபற்றியும் ஒரு தொடர் எழுத வேண்டும்.
KRS,
//படங்கள் அருமை! பதிவும் அருமை!
கண்டேன் கண்ணுக்கினியனைக் கண்டேன்!
கண்டன் மணி கண்டன் கண்டேன்!
முகர்ந்தேன் சந்தனம் முகர்ந்தேன்!
நுகர்வேன் சந்ததம் நுகர்வேன்!
ஆரியங்காவு வைபவம் அருமை சிவா!//
வாங்க தமிழ்மண வீண்மீனே!வருகைக்கும், சந்தனமுகர்ந்தமைக்கும், ஒரு புதிய பாட்டுக்கும் மிக்க நன்றி.
//பதிவில் சொல்லிஇருந்தீர்கள். அம்பாள் புஷ்கலை ’T’ என ஆரம்பிக்கும் ஒரு வீட்டு பெயர்கொண்டவர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.//
என்னோட படிச்ச ஒரு பெண்ணின் குடும்பப் பெயர் "தோப்ளா"னு நினைக்கிறேன். இப்படி ஒரு பெயர் இருக்கானும் தெரியாது. நினைவில் தங்கிய பெயர் இது தான், இன்னொரு பெண்ணின் குடும்பப் பெயர் "குட்டுவா' என்று சொல்வார்கள்.
கதை நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள், ஆனால் என்னுடைய கேள்வி, இப்போதும் நடைபெறுகிறதா என்பதே! இருங்க திரும்பி ஒரு முறை போய்ப் பதிவை மீண்டும் படித்து விட்டு வருகிறேன்.
இந்த வருஷமும் நடந்ததா????????
//என்னோட படிச்ச ஒரு பெண்ணின் குடும்பப் பெயர் "தோப்ளா"னு நினைக்கிறேன்/ இப்படி ஒரு பெயர் இருக்கானும் தெரியாது.//
அது தோப்ளா அல்ல ஓப்ளா.
//நினைவில் தங்கிய பெயர் இது தான், இன்னொரு பெண்ணின் குடும்பப் பெயர் "குட்டுவா' என்று சொல்வார்கள்.//
இப்படி பல பேர்களுண்டு.
//கதை நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்//
நாடகமா? நடந்ததா? என்று ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு அது ஏனோ இதை கண்டதும் நினைவிற்க்கு வந்தது. :)
//ஆனால் என்னுடைய கேள்வி, இப்போதும் நடைபெறுகிறதா என்பதே! இருங்க திரும்பி ஒரு முறை போய்ப் பதிவை மீண்டும் படித்து விட்டு வருகிறேன்.//
இப்பதிவு எழுதிய ஆண்டு வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. 1972ஆம் வருடம் சில விஷமிகள் இதை தடுத்தனர் என்றும் திரு.S.J.இராஜன் அவர்கள் பகீரதப்பிரயத்தனம் செய்து இதை மீட்டதாகவும் கேள்விபட்டுள்ளேன்.
இவ்வருடம், பல சௌராஷ்ட்ர சமூக சங்கங்கள் கலந்து கொண்டு தம் குல சாபத்தின் வீரியத்தை குறைத்து கொண்டனர். அடுத்த வருடம் நிறைய பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர், சும்மாவா! சாபவிமோசன ஆண்டல்லவா!
இன்றுதான் படித்தேன்.....புதிய தகவல்கள்....நன்றி...
இன்றுதான் படித்தேன்.....புதிய தகவல்கள்....நன்றி...
சிவமுருகா!
தங்கள் சந்தனம் எனக்கு புதிய செய்தியைத் தந்தது. எங்கள் ஈழத்தில் ஐயனார் கோவில்கள் சில உள்ளன. அங்கே பூரணா, புட்கலா சமேதராகத் தான் ஐயனார் உள்ளார். குறிப்பாக சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு ஐயனார் என் தாய்வழிக் குலதெய்வம். இக்கோவில் வட ஈழத்தில் மி்கப் பிரபலம். இவ்விக்கிரகங்கள் கடலில் மி்தந்து வந்து எடுத்ததாகக் கூறுவார்கள். ஆவணிமாதத்தில் வெகுவிமரிசையாக 15 நாள் திருவிழா நடைபெறும்.
அத்தனை கோவிலிலும் யானை வாகனம் உண்டு.
இதனால் இப்போ எனக்கு ஐயப்பன்= ஐயனார் என்பதாகக் கொள்ளலாமா?? அல்லது
தமி்ழ் நாட்டு ஐயனார் என்பது ஐயப்பனிலும் வேறுபட்ட தெய்வமா??
அல்லது கிராமி்ய வழிபாட்டில் ஐயனார்; ஆகம வழிபாட்டில் ஐயப்பனாகி விட்டாரா??
கிராமி்ய வழிபாட்டில் கிடாவெட்டு ஐயனாருக்கு உண்டு.
ஈழ ஐயனார் கோவில்களிலும் சுமார் 75வருடங்களுக்கு முன் இருந்துள்ளது. இப்போ மி்ருகங்கள் பலியிடுவதில்லை. ஆனால் இன்னும் கோவிலுக்கு நேர்ந்து கொடுத்தல்
உள்ளது.
வாங்க மௌலி.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.
//சிவமுருகா!
தங்கள் சந்தனம் எனக்கு புதிய செய்தியைத் தந்தது.//
நன்றி.
//எங்கள் ஈழத்தில் ஐயனார் கோவில்கள் சில உள்ளன. அங்கே பூரணா, புட்கலா சமேதராகத் தான் ஐயனார் உள்ளார்.//
ஐயனாருக்கு இரு தொழில்கள், பூரணத்துவமும், பூக்களை பேணுவது இரண்டு மனைவியாகி விட்டது. இப்படிதான் இந்து மத கடவுள்களுக்கு மனைவி(மார்கள்) அமைந்துள்ளன.
//குறிப்பாக சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு ஐயனார் என் தாய்வழிக் குலதெய்வம்.இக்கோவில் வட ஈழத்தில் மி்கப் பிரபலம். இவ்விக்கிரகங்கள் கடலில் மி்தந்து வந்து எடுத்ததாகக் கூறுவார்கள். ஆவணிமாதத்தில் வெகுவிமரிசையாக 15 நாள் திருவிழா நடைபெறும்.
அத்தனை கோவிலிலும் யானை வாகனம் உண்டு.//
ஐயனாருக்கு வாகனம் யானை தான், அழகரும்,சொக்கரும் யானை வாகனத்தில் வருவர்.
//இதனால் இப்போ எனக்கு ஐயப்பன்= ஐயனார் என்பதாகக் கொள்ளலாமா??//
கொள்ளலாம்
//அல்லது தமி்ழ் நாட்டு ஐயனார் என்பது ஐயப்பனிலும் வேறுபட்ட தெய்வமா??அல்லது கிராமி்ய வழிபாட்டில் ஐயனார்; ஆகம வழிபாட்டில் ஐயப்பனாகி விட்டாரா??//
ஐயப்பன் பற்றி கீதாசாம்பசிவம் அவர்கள் ஐயப்பனை தரிசிக்க வாருங்கள் என்று ஒரு தொடர் எழுதியுள்ளார் அது உங்களது ஐயங்களை நீக்கும்.
//கிராமி்ய வழிபாட்டில் கிடாவெட்டு ஐயனாருக்கு உண்டு.//
ஐயனார் சுத்த சைவம், அவருக்கு அருகில் இருக்கும் கருப்பன் ஆண்டி போன்ற தெய்வங்களுக்கு தான் கிடாவெட்டு நடக்கும்.
//ஈழ ஐயனார் கோவில்களிலும் சுமார் 75வருடங்களுக்கு முன் இருந்துள்ளது. இப்போ மி்ருகங்கள் பலியிடுவதில்லை. ஆனால் இன்னும் கோவிலுக்கு நேர்ந்து கொடுத்தல்
உள்ளது.//
தகவல்களுக்கு நன்றி.
ஒற்றுமைக்கு இந்த மாதிரி நிகழ்வுகள் அல்லவோ வேண்டும். சிவமுருகன் அருமையான தகவல்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.
பக்திக்கு இடம், தேசம்,காலம் கிடையாது என்று மீண்டும் மீண்டும் தெய்வம் நிருபிக்கிறது.
//ஒற்றுமைக்கு இந்த மாதிரி நிகழ்வுகள் அல்லவோ வேண்டும்.//
அட வலைபூவோட பேர் சரியாத்தான் வந்திறுக்கு :-)
//சிவமுருகன் அருமையான தகவல்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.//
நன்றி.
//பக்திக்கு இடம், தேசம்,காலம் கிடையாது என்று மீண்டும் மீண்டும் தெய்வம் நிருபிக்கிறது.//
ஒவ்வொருவருடமும் நிருபித்துக்கொண்டிருக்கிறது.
Post a Comment