Tuesday, May 30, 2006

153: கணித்திருவிழையாடல்.

இது வரை நான் நகைசுவைபதிவை பதித்தில்லை முதல் முறையாக ஒரு நகைச்சுவை பதிவு தொடர்.
கணித்திருவிழையாடல்.
(சிரிப்பதற்க்கு மட்டும்)


இடம்: மக்கள் கூடும் சந்தை

முரசு அறிவிப்பவன் யானை மீதிருந்து முரசு அறிவிக்கிறான்...

டும்... டும்... டும்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!!

நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்ககூடிய C program கொண்டு வரும் ப்ரோகிராமருக்கு 1000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும்... டும்... டும்...
தருமி கூட்டத்தை விலக்கி கொண்டு முன் வருகிறான்
தருமி: (முரசு அறிவிப்பவனை பார்த்து) எவ்ளோ? 1000 அமெரிக்க டாலரா?
முரசு அறிவிப்பவன் : ஆமாம்.... ஆயிரம் அமெரிக்க டாலர்கள்
தருமி ஆவலை கட்டுபடுத்த முடியாமல், தனக்கு தானே பேச ஆரம்பிக்கிறான் ஆய்யோ ஒன்னா ரெண்டா ஆயிரம் டாலராச்சே, ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நான் என்ன பண்ணுவேன்.இப்போன்னு பார்த்து program எழுத வரலை ... அப்பா சொக்கா!!!! சிவன் தருமியின் முன் தோன்றுகிறார். அவரை பார்த்தால் system programmer போல் இருக்கிறார்.
சிவன்:புரோகிரமரே...
தருமி: யாரது?
சிவன்: அழைத்தது நான் தான்.
தருமி: அப்படியா? ஏன் அழைச்சீங்க?
சிவன்:மன்னரின் அய்யப்பாட்டை நீக்கும் உனக்கு கிடைத்தால் பரிசு அத்தனையும் உனக்கே கிடைத்துவிடுமல்லவா?
தருமி: ஆமாம், ஆமாம்
சிவன்: நான் அந்த ப்ரோகிராமை தருகிறேன்
தருமி: யாரு யாரு ... நீ
சிவன்: ஆம்
தருமி: அத கொண்டு போய் என் ப்ரோகிராம்னு சொல்லவா. எதோ Y2K BUG எல்லாம் solve மன்னிகிட்டு இருக்கேன், ப்ரோகிராம்ன்னு ஒத்துகிட்டு இருக்காங்க, அதையும் கெடுக்கலாமுன்னு பாக்கிறியா?
சிவன்: பரவாயில்லை எடுத்துச் செல்.
தருமி: அப்ப திருடலாம்ன்னு சொல்றியா?
சிவன்: ஹா ஹா ஹா ஹா
தருமி: தெய்வீக சிரிப்பையா உங்களுக்கு,
சிவன்: என் திறமைமீது சந்தேகமிருந்தால், நீ வேண்டுமானால் என்னை பரிசோதித்து பாரேன்... உனக்கு திறமை இருந்தால்
தருமி: தருமிக்கு கோபம் வருகிறது. யாரு... ஏங் எங்கிட்டேவா, எங்கிட்டேவா, மோத பாக்கிறியா, நான் ஆளு பார்க்க தான் சுமாரா இருப்பேன். ஆனா என் ப்ரோகிறாமை பற்றி உனக்கு தெரியாது... தயாரா.... இரு....
சிவன்: அப்படியே. கேள்விகளை நீகேட்கிறாயா நான் கேட்கட்டுமா?
தருமி: (நடுக்கத்துடன்) ஆ.. நானே கேட்கிறேன். எனக்கு கேட்க தான் தெரியும்...

(தொடரும்...)

Monday, May 29, 2006

151: நவபக்தி - தாச பக்தி

தாச பக்தி
இறைவன் சேவை ஒன்றே குறிக்கோள்.


பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

-கடுவெளி சித்தர்

இறைவனை தன் எஜமானனாக, தெய்வமாக கொண்டு, அவன் மேல் எந்நேரமும் பக்தி கொண்டு அவன் சேவையே கடமையாக பிறப்பின் லட்சியமாக கொண்டு செய்வது இவ்வித பக்தி..

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு.


-கடுவெளி சித்தர்

என்ற சித்தரின் மொழிக்கேற்ப்ப இறைவனுக்கோ, அவர்தம் அடியவர்க்கோ தொண்டு செய்து, இறைவனடி அடைந்தவர் ஏராளம், அத்தகைய சேவையை பலவகைகளில் செய்து உய்வடைந்தவர்கள் பலர் அதில் சிலர்.

வைகுண்டத்தில் இராமாயணமில்லை, இராமாநாம இல்லை என்ற ஒரே காரணத்தால் எப்போதும் இவ்வுலகில் இது நாள் வரை இராம சேவை செய்தும் இராம நாமாவை சொல்லியும், வரும் வானரவீரன் சிரஞ்சீவி ஆஞ்சநேயன்,

அசுரனாக பிறந்தாலும் பிராமணத்தேஜஸ் நிறைந்த விபீஷணன்,

மதுராபுரியின் முக்கிய அமைச்சர் உக்கிரசேனர்,

தரும தேவதையின் மறுபிறப்பான “விதுரர்”.

எப்போதும் ஈசனையே தியானிக்கும் நந்தி, கிங்கன-பூத கணங்கள்.

நாயன்மார்களில் தாசனுக்கு தாசன் என்று தன் வாழ்வை அற்பனித்த திருகுறிப்புதொன்ட நாயனார்,

மேலும் மாணிக்கவாசகரின் தொண்டு அளர்பரியது, சிவசங்கரன் மேல் தீராத பக்தி கொண்டு எத்தனை இறைசேவை செய்தாலும், அதனால் சிறு கர்வமும் கொள்ளாது இருந்தவர். நலிவடைந்த கோவில்களை செப்பனிட்டு குடமுழுக்கு செய்ய பல வழிவகை செய்து மனிதனாக பிறப்பெடுத்த காரணத்தை பூர்த்தி செய்தவர். மீண்டும் பிறவா நிலை எய்தவர்.

தாச பக்தி பற்றிய பல உதாரணங்கள் நினைவில் வந்தாலும், அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரே பத்தியில், ஒரே ஓட்டத்தில் சொல்ல வேண்டும் என்று எண்ணி, இறைவனை சரணைடைந்த போது, அமரகவி பாரதியின் கண்ணன் பாட்டு நினைவில் வந்தது. இப்பாடலில் தாசபக்திமூலம் என்ன விதமான நன்மைகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்.

அதில் “அச்சமில்லை அச்சமில்லை” என்று உணார்ச்சியூட்டிய பாரதி சொல்கிறார் இறைவனை சரணடைந்த போது “துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை” என்று எதிர்மறையான எவ்வித உணர்வுகளும் ஏற்படாது, இருந்தாலும் இல்லாது போகும் என்று சொல்லாமல் சொல்கிறார் அமரகவி., இதோ அவரது பாடல்,

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

இதைவிட நான் என்ன பெரிதாக சொல்ல போகிறேன்.
10ல் 2வது
இனி அடுத்த பதிவு நாயகி பக்தி

150: நூற்றிஐம்பாதவது பதிவு.

150வது பதிவில் என்ன எழுதுவது, எப்படி ஆரம்பிப்பது என்று பலவாறு யோசித்த போது, (கிட்டதட்ட மூன்று நாட்கள்), இதையே ஏன் ஒரு நன்றி தெரிவிக்கும் ஒரு பதிவாக மாற்றக்கூடாது என்று நினைத்தேன், செய்கிறேன்.

கடந்த அக்டோபரில் மணற்கேணி பதிவு ஆரம்பித்து என்னுடைய சிறு குறிப்பை மட்டும் அளித்திருந்தேன். அதன் பிறகு எந்த பதிவுகளையும் இடாமல் இருந்து வந்தேன். அப்போதும், இப்போதும் பதிவுலகில் கொடிநாட்டிவரும் பல பதிவர்களின் பதிவுகளான ‘ஆன்மீக சூப்பர் ஸ்டார்’ குமரன் அவர்களின் மதுரையின் ஜோதி (நான் படித்த முதல் பதிவு), கூடல் (என்னை மீனாட்சி அம்மன் கோவிலின் படங்களை ஆரம்பிக்க ஒரு தூண்டு கோலாய் இருந்த பதிவு), அபிராமி பட்டர் (அன்னை மீனாக்ஷியின் புகழ் பாட என்னை ஊக்கப்படுத்திய பதிவு), ‘மழை’ பிரதீப் (பதிவுகளை பற்றிய என்னுடைய ஒரு நேரான பார்வை மாற்றிய பதிவு), ஞானவெட்டியான் அவர்களின் ஞானக்குறள், ஞானக்கும்மி, (என்னை சித்தர் பாடல்களை பற்றி படிக்க தூண்டிய பதிவுகள்), படிக்க ஆரம்பித்தேன். படித்து வந்த நட்களில் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி குமரன் அவருடைய மதுரை-1 பதிவில் கண்ட “கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்” என்ற வாசகம் என் எண்ணத்தை கிளரியது “கோபுர தரிசனமே கோடி புண்ணியமென்றால் அக்கோயிலின் உட்புறத்தை ஒரு தொடராக சொன்னால்?” என்ற என் சிந்தனையும் அங்கயர்கண்ணியின் அருளுடனும் கடந்த பிரவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பித்த பயணம், இதோ மேலும் 7 விதமான வலைபூக்களை ஆரம்பித்து தங்களின் பேராதரவுடன் கடந்த 98 நாட்களில் 150 பதிவுகளை இட்டு தொடர்கிறேன்.

என்னை மேலும் ஊக்கப்படுத்திய விஷயங்களை பற்றி எண்ணி பார்த்த போது,
முதலாவதாக, என் பதிவுகளுக்கு தவறாது வருகைதரும் திரு. என்னார். (இவருடைய பதிவுகளை தற்சமயம் படித்து சோழர்களின் வரலாற்றை அறிந்து கொண்டேன் அதே போல் பாண்டியர் வரலாற்றை தொகுக்க தருணம் பார்த்து காத்திருக்கிறேன்!)

நம் அனைவராலும் தி.ரா.ச. என்று அன்போடு அழைக்கப்படும் திரு, சந்திரசேகரன், மேலும் தொடர்ந்து வருகைதரும் ஸ்ரீ அன்னையின் பக்தரான திரு நடேசன்,

“கவலற்க யாமுள்ளோம்” என்று ஊக்கமளித்த ஐயா ஞானவெட்டியான்,

“தமிழ்மணத்தில் கற்றுக்கொடுக்க பலர் உள்ளனர்” என்ற அண்ணன் குமரன்

எப்போதும் அன்புடனும், ஆசிகளுடனும், பின்னூட்டமிடும் “டீச்சர்” என்று அனைவராலும் அன்புடன் அழக்கப்படும் அம்மா துளசி கோபால்,

தமிழ்மணத்திலும், முத்தமிழ் குழுமத்திலும் முத்திரை பதித்து வரும் திரு. செல்வன், கீதாம்மா,

மேலும் ‘மகரந்தம்’ திரு. ராகவன், திரு தருமி, திரு +இராமர், ‘தூறல்கள்’ திரு கார்த்திக், திரு.SK, திரு. மனு, திரு. நன்மனம், ‘மழை’ ஷ்ரேயா மேடம், பாஸ்டன் பாலா, காயத்ரி மேடம், மேலும் வந்து பின்னூட்டமிடாமல் வருகை எண்ணிக்கையை உயர காரணமான பலருக்கும் நன்றி.

நன்றி நன்றி நன்றி

மேலும் முதல்முதலாக வெரும் 22 பதிவுகளை இட்டிருந்த எம் பதிவையும் தம் தினசரியில் இட்ட தினமலருக்கும், முதலிலேயே எம் மீனாட்சி அம்மன் கோவில் பட பதிவை கண்டு ஊக்கமளித்த மரியாதைக்குரிய ஐயா திரு. கருமுத்து கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னங்க ரொம்ப சீரியஸா போச்சா. ஒரு டைம்லி ஜோக்!

150 என்ற எண்ணை பற்றி என்னுடைய மருகன் (அக்கா மகன்) கடந்த வியாழனன்று என்னிடம் கேட்ட ஒரு கேள்வி,

மருகன்: மாமா தமிழ்ல ஒரு கணக்கு பதில் சொல்லுவீங்களா? (வீட்டில் தாய்மொழி சௌராஷ்ட்ரா பேசுவோம்)
நான்: என்ன கேக்கபோற, 4ம்+3ம்மா? இல்ல 3ம்+4ம்மா? கேள் பார்ப்போம்.
மரு: அய்யோ! மாமா அதில்ல, நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்தம்பது ரூபாய்க்கு வித்தா லாபமா நஷ்டமா? சொல்லுங்க பார்ப்போம்.
நான்:பூ! ரொம்ப ஈஸி, லாபம் ரூ. ஐம்பது.
மரு: இல்ல! நல்லா யோசிச்சி சொல்லுங்க.
நான்: இதுல யோசிக்க என்ன இருக்கு! அவ்வளவு தான்.
மரு: நூறுரூபாய்க்கு பஞ்சு வாங்கி, நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா நஷ்டம் தானே? நூக்ற கூலி வேற. என்றானே பார்க்கனும்.
நான்: டாய்! என்றபடி துரத்தினேன். அதை பார்த்த வீடே சிரித்தது.

இந்த காலத்து பசங்களை எடை போடவே முடியல.

Thursday, May 25, 2006

148: நவபக்தி #முகவுரை.

நவபக்தி

குமரன் அவர்களின் கேட்டதில் பிடித்தது பதிவில் “பக்தி மரபில் இறைவனை காதலனாகவும் தம்மை காதலியாகவும் நினைத்து வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது.” என்று சொல்லியிருந்தார். அச்சமயம், நான் கடந்த 2000ல் கேட்ட திரு. தா.கு.சுப்ரமணியன் அவர்களின் “நவபக்தி” என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவில் அவராற்றியது நினைவிற்க்கு வந்தது, வரும் பதிவுகளில் ஒரு தொடராக தரவிருக்கிறேன்.

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தொடங்கி அவராற்றிய சொற்ப்பொழிவு.

நவபக்தி என்பது ஒன்பது விதமான இறைதொண்டு. அத்தொண்டை புரிந்துகொண்டு இறைவனை வழிபடுவதும், கூடவே தம் நித்திய தர்மாச்சாரங்களையும், நியமங்களையும் செய்து வருவதே பக்தனின், மனிதனாக பிறந்தவனின் கடமை.

“பக்தி செய்து பிழைக்கச்சொன்னான் பலன்கருதா உழைக்கச்சொன்னான்” என்பது பாரதி சொன்ன கீதையின் சாரம்.

“அப்பேற்ப்பட்ட பக்தியானது என்ன?”

“கடவுளை யார் என்ன கூறினாலும் அதை முழு மனதுடன் சொன்னால் அதையே தன்னை பக்தி செய்ததாக ஏற்றுக்கொள்கிறான். அந்த பலன்படி அவன் தன் மக்களை கரை சேர்க்கிறான்.”

1. தாச பக்தி - இறைவன் சேவை ஒன்றே குறிக்கோள்.
2. நாயகி பக்தி - இறைவனே தன் காதலன், நாயகன்.
3. பத்னி பக்தி - இறைவனே என் கனவன்.
4. சகோதர பக்தி - இறைவன் என் சகோதரன்.
5. நாரத பக்தி - இறைவனை பாடல்களால் பாடி பரவசப்படுவது.
6. மித்ர பக்தி - இறைவன் என் தோழன்.
7. ப்ரோஹித பக்தி - இறைவனை மந்திரங்கள் சொல்லி பரவசப்படுவது.
8. குரு பக்தி - இறைவன் என் ஆசான்.
9. விரோத பக்தி - இறைவன் என் எதிரி.

Wednesday, May 24, 2006

147: காற்றுவெளியிடை கண்ணம்மா

வலைப்பதிவர் பெயர்: சிவமுருகன் நீலமேகம்
வலைப்பூ பெயர் : 1.தொட்டனைத்தூறும் மனற்கேணி, 2.நிகழ்வுகள், 3.சௌராஷ்ட்ரா திருக்குறள் (10 எழுத்துக்களில்) 4. சித்தர் பாடல்கள் 5.महिषासुरमर्दिनि स्तोत्रम (மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் ஹிந்தி) 6.மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் (தமிழ்) 7.நானிட்ட பின்னூட்டங்கள் 8. SAP-பற்றி. ,9.நினைவுகள்
சுட்டி :http://sivamurugan.blogspot.com/, http://nigalvukal.blogspot.com, http://soukurals.blogspot.com/, http://siddharsongs.blogspot.com/, http://mahishasuramardhinihindi.blogspot.com/, http://mahishasuramardhinitamil.blogspot.com/, http://sivacomments.blogspot.com/
http://sivasap.blogspot.com/ , http://sivaexperience.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: பிறந்தது மதுரை, வசிப்பது புதுதில்லி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலைசுற்றில் கிடைத்தது மேலும் ஊக்கமளித்தது, அண்ணன் குமரன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 2005
இது எத்தனையாவது பதிவு: 147
இப்பதிவின் உர்ல்: http://nigalvukal.blogspot.com/2006/05/147.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தகவல் பகிர்வுக்காவும், புதிய மற்றும் பல அரிய செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்
சந்தித்த அனுபவங்கள்: புதிய நன்பர்கள், இன்னும் நிறைய.
பெற்ற நண்பர்கள்: திரு. குமரன், திரு. என்னார், திரு.பிரதீப், திரு.பிரதீப், திரு.ஞானவேட்டியான், ஐயோ இன்னும் பலபேர் இருக்காங்களே!ஞாபகத்துக்கு வரமாட்டீங்குதே சொக்கா!
கற்றவை: ஒன்னா ரெண்டா நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நிறைய கிடைத்தது. சந்தோஷமா இருக்கு.
இனி செய்ய நினைப்பவை: பல விஷயங்களை பதிக்க வேண்டும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வேங்கடவனின் அருளோடு மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்து, புதுதில்லியில் வேலைபார்க்கும் அம்மன் மீனாட்சியின் பக்தன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: அறிவியலையும், ஆன்மீகத்தையும், இவ்வுலகில் ஈகையுடன் உயிரின் ஊக்கமாக எடுத்து ஏடாகி ஐயத்தை ஒடுக்கி ஓயாதிருக்க ஔவையை வணங்குகிறேன்.

1.
வலைபூ பெயர்: தொட்டனைத்தூறும் மனற்கேணி,
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சும்மா தான் தோண்டினா என்ன கிடைக்கும்னு பார்க்க தோணிச்சு, இதுல இவ்ளோவான்னு இப்ப எனக்கே மலைப்பா இருக்கு.

2.
வலைபூ பெயர்: நிகழ்வுகள்,
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நித்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள

3.
வலைபூ பெயர்: சௌராஷ்ட்ரா திருக்குறள் (10 எழுத்துக்களில்)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சௌராஷ்ட்ரா திருக்குறள் பற்றி சௌராஷ்ட்ரர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது, மொழி ஒரு தடையல்ல என்பதை உணர்த்த, 10 மொழி எழுத்துகளில் தருவதற்க்காக

4.
வலைபூ பெயர்: சித்தர் பாடல்கள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: சித்தர் பாடல்களை பகிர்ந்துகொள்ள.

5.
வலைபூ பெயர்: महिषासुरमर्दिनि स्तोत्रम (மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் ஹிந்தி)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் கிடைத்ததை ஹிந்தியில் தர.

6.
வலைபூ பெயர்: மஹிஷாசுரமர்தினி ஸ்தொத்ரம் (தமிழ்)
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் கிடைத்ததை தமிழில் தரவும்.

7.
வலைபூ பெயர்: நானிட்ட பின்னூட்டங்கள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: பின்னூட்டங்களை திரும்பி பார்க்க

8.
வலைபூ பெயர்: SAP-பற்றி.
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னுடைய வேலைகளை பற்றி ஒரு சுய விண்ணப்பம் தர. நான் கற்பதையும், கற்றதையும் பகிர்ந்துகொள்ள.

9
வலைபூ பெயர்: நினைவுகள்
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மிகப்பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள.

Monday, May 22, 2006

146: தமிழ் நாடு மேல் நிலை பள்ளி தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு மேல்நிலை பள்ளியின் இறுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் முதல் மாணவராக நங்கநல்லூரை சார்ந்த, திரு பரத்ராம், 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார்.

மொத்த தேர்வானவர்கள் விழுக்காடு 74.4%.
இதில் மானவர்கள் பங்கு - 71.7%
மேலும் மானவிகள் பங்கு - 77.1%

மேலும் முடிவுகளுக்கு தேசிய தகவல் மையத்தின் தமிழக கிளையின் தளம்.

மேலும் தகவல்கள் இங்கே.

முதல் மதிப்பெண் பெற்ற பரத்ராமுக்கும், தேர்வு பெற்ற அனைவருக்கும் எம்பதிவர் உலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், மேற்படிப்பில் நீங்கள் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த அன்னை மீனாட்சிசுந்தரேஸ்வரரை வேண்டுகிறேன்.

Thursday, May 18, 2006

138: மண்டூக மகரிஷி

சித்திரை திருவிழாதொடரில் என்னார் அவர்கள் மண்டூக மகரிஷி பற்றி சற்று விவரிக்க சொன்னார்..

ஹிந்து சனாதன தர்மத்தில் காரணகாரியமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற திடமான நம்பிக்கை உள்ளவன் நான். மனம் ஒரு தவளையாக மாறி, தன்னை சுற்றி ஒரு பெரிய மதிலை உருவாக்கி அதற்க்குள்ளே வாழ்ந்து வருபவர்களை கண்டு வாழவும் கற்றுக்கொண்டு விடுகிறது, அதிலிருந்து மீண்டு உலகின் அனைத்தின்பங்களை சுகிக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல பகவான் தான் எத்தனை எத்தனை லீலைகளை புரிகிறார். அதில் ஒன்று தான் மண்டூக மகரிஷிக்கு மோக்ஷமளிப்பது. மண்டூகஹ என்றால் வடமொழியான செங்கிருதத்தில் (சமஸ்கிருதம்) மூடன் என்ற பொருளும், தவளை என்ற பொருளும் கொண்ட ஒரு சொல்.
சுதபஸ் என்ற முனிவர், கடம்பவன காட்டில் ஆஸ்ரமம் அமைத்து தவமியற்றி வந்தார். சதா சர்வகாலமும் பெருமாள் நினைவிலேயே இருப்பார், எப்போது பெருமாள் வருவார், இத்தனை நாட்களில் வருவார், பெருமாள் வருவார், என்று அனுதினமும் அவருக்கு பூஜை செய்வார் இப்படியே காலம் கடத்தி கொண்டிருந்தார். அதனால் ஒரு குருக்குரிய, தவசீலருக்குரிய சாதனைகளை, தவங்களை, நித்ய கடன்களை செய்ய தவறினார். கடன்களை செய்ய தவறுபவன் தன் இஷ்ட பக்தனாக இருந்தாலும் அவனை திருத்துவது பகவானது கடமையன்றோ!. ஆகவே, சுதபஸை திருத்த ஒரு தக்க தருனத்திற்காக காத்திருந்தார்.

ஒருநாள் அப்படியே தமது பேரானந்த நினைவுகளில் மூழ்கியிருந்த வேளையில் அவரது ஆஸ்ரமத்திற்க்கு கோபமுனி என்று பெயர் பெற்ற துர்வாசர் வந்தார், அவர் வந்ததை சுதபஸ் கவனிக்கவில்லை பெருமாள் நினைவிலேயே மூழ்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவரை கவனிக்கவில்லை என்று கோபங்கொண்ட துர்வாசர் அங்கே ஆஸ்ரமத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்த சுதபஸை நோக்கி ‘சுதபஸ்! ஆஸ்ரமத்திற்க்கு வரும் அதிதியை எவ்வாறு வரவேற்க்க வேண்டுமென்று தெரியாத மண்டு. மண்டூகமாக கடவது!’ என்று சபித்தார். ஈசனே தன்னை ஆழ்பவன் என்ற நினைவுகளை கொண்ட துர்வாசரின் வாக்கு பலித்தது, சுதபஸ் தவளையாக மாறினார். மாறியவர் சுயநினைவிற்க்கு வந்து தாம் செய்த பிழைக்கு மன்னிப்பு கோரி சாபவிமோசனத்திற்க்கு வழிகேட்டார். அப்போது சுந்தராஜபெருமாளை கருடாருட வாகனத்தில் காணும் போது விமோசனம் பெருவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். வைகுண்டத்திலிருக்கும் கருடாருட சுந்தர மூர்த்தியை வையகத்தில் தவளையாயிருக்கும் தனக்கெப்படி கிட்டும் என்று கேட்க. ஸ்ரீ ஆண்டாள் மாலை பெற சைத்ர பௌர்ணமியில் சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் கோலங்கொண்டு வருவார் அவ்வமயம் அடுத்தநாள் கருடாருட வாகனத்தில் கடம்பவன காட்டின் வடபகுதியிலிருக்கும் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் அங்கே பல ஜீவராசிகளுக்கும் காட்சியளிப்பார் அன்றே சுதபஸ் நீ விமோசனம் பெற்று பழைய நிலை அடைவாய் என்றார். அதுவரை மண்டூக மகரிஷி என்று பெயருடன் இதே வைகை நதிக்கரையில் பகவானின் நினைவுடனும் இன்ன பிற நித்யகடன்களை செய்தும் வாழ்ந்து வருவாய் என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.

அத்தீர்கதரிசியின் சொல்படி அழகர் மலையிலிருக்கும் சுந்தராஜர் கள்ளழகர் கோலத்துடன், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை பெற்று. வீரராகவ பெருமாளின் வரவேற்ப்பை ஏற்று, பின் அம்மாலையை அணிந்து ஆற்றில் இறங்குகிறார். மறுநாள் தேனூர் மண்டபத்தில் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் காணதுடித்து கண்டும் விட்ட திவ்ய தரிசனமான (‘திடவ் கன் கெருடோரவி தேவ் கிருப கரய் கரய்’-என்றால் கருட வாகனத்தில் வந்து பெருமான் காத்தருள்வான்) கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோக்ஷமளிக்கிறார்.

ஸ்ரீ மந்நாயகி சுவாமிகள் ஒரு வரகவியாவார், தாம் பார்த்த ஒரு பொருளோ, ஒரு காட்சியோ அதன் மேலும் ஒரு கவிபாடி அதிலும் பெருமானையே காண்பார். அப்படி அழகர் பரிமேல் வரும் அழகை கண்டு அவர் பாடிய பாடல்.

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா
பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா
சிறியேன் படும் துயரை அறியாயோ - செங்கண்மால்
ஹரியே உன்திருவடியே அடியேற்கு துணை

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

கண் பாராய் அழகா கருமமற
கண் பாராய் அழகா
கண் பாராய் எந்தன் கவலையொழிந்திட
விண்மண் அளந்த திருவடியுடைய விமலா

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

துணையார் எனக்கழகா தொண்டுகொள்வாய்
துணையார் எனக்கழகா
துணையார் எனக்கு உந்தன் இணையடியல்லால் ஆயர்
மனைதோறும் புகுந்து வெண்ணை உண்டவாயா

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

கடைத்தேற்றும் அழகா கருணைவைத்து
கடைத்தேற்றும் அழகா
கடைத்தேற்றாய் என்னை காலன் கையிலாடாமல்
இடையர்குலம் உய்வித்த நடனகோபாலா!

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

Wednesday, May 17, 2006

136: சித்திரை திருவிழா படத்தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்.
சித்திரை திருவிழா படங்களின் முழு தொகுப்பு இங்கே தினமலரில்.
கண்டு மகிழ சுட்டியை தந்துள்ளேன்.

நன்றி.

Tuesday, May 16, 2006

135: சித்திரை திருவிழா பதினேழாவது நாள்

இன்று(16-05-2006) மூன்று மாவடியிலிருந்து கள்ளழகர் கோலத்தில் அழகர் மலைக்கு திரும்பினார்.

பல்லகில் கிளம்பி, பரிமேல் வந்து வைகை ஆற்றில் இறங்கி, மன்டூக மகரிஷிக்கு மோக்ஷமளித்து, தசாவதாரம் காட்டி, பல்லக்கில் திரும்பும் அழகா, இத்திருவிழா படங்களை கண்டவர்கள், நின்னடி தொழுது மோக்ஷம் பெற்ற மக்களின் பலனருள உன்னை வேண்டுகிறேன்

.

சித்திரை திருவிழாமுடிவடைந்தது.

சுபமஸ்து.

Friday, May 12, 2006

134: சித்திரை திருவிழா பதினாறாவது நாள்

நேற்று(14-05-2006) இரவு தல்லாகுளம் வந்த அழகர் பக்தர்களுக்கு பூப்பல்லாகில் அருகாட்சி அளித்தார்.

133: சித்திரை திருவிழா பதினைந்தாவது நாள்


ராமராயர் மண்டபத்தில் அழகர் நிகழ்த்திய தசாவதாரக் காட்சி.

(முத்தங்கி சேவை, மச்சாவதாரம், கூர்மாவதார, வாமனாவதாரம், ராமவதாரம், கிருஷ்ணாவதாரம், மோஹினி அவதாரம்.)

மேலும் படங்களும் செய்திகளும் இங்கே தினமலரில்.

132: சித்திரை திருவிழா பதிநான்காவது நாள்

கோவிந்தோ... கோவிந்தோ...

சேஷாயுவாகனத்தில் கள்ளழகர் காட்சியளித்தார்.


பக்தர்களின் 'கோவிந்தோ' கோஷத்திற்க்கிடையில் ராமராய் மண்டபத்திலிருந்து வெளியவந்த போது.

மன்டூக மகரிஷிக்கு மோக்ஷமளித்த போது

அனுமார் மற்றும் கருடன் வேடமனிந்தவர்கள் நடனமாடியபடி கள்ளழகருக்கு முன்னால் வருவதை காணலாம்

131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்

சூடிகொடுத்த சுடர்கொடியான ஆண்டாளின் மாலை பெற்று ஆற்றில் இறங்கிய கள்ளழகர். அதற்க்கு முன்னதாக ஆண்டாள் இருதினங்களுக்கு முன்னர் அம்மாலையுடன் காட்சியளித்தார்.


கள்ளழகர் இன்று ஆயிரக்கனக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நடுவே ஆற்றில் இறங்கிய போது, பலர் தண்ணீர் பீச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

130: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்இன்று(12-05-2006) மாலை தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவை செய்த பக்தர்கள்.

நாளை(13-05-2006) காலை 5.58க்கு மேல் 6.05 க்குள் வைகையில் பக்தர்கள் வெள்ளத்தினிடையே எழுந்தருள்வார்.

129: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்

வாராரு வாராரு அழகர் வாராரு.

அழகர்மலையிலிருந்து சுவாமி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் இன்று(12-05-2006) காலையில் கிளம்புகிறார். தொள்ளாயிரத்திர்க்கும் அதிகமான மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களை ஆனந்த கடலில் ஆழ்த்த உள்ளார்.

கள்ளழகர் மலையிலிருந்து புறப்படுகிறார்
பூரன அலங்காரத்தில் கள்ளழகர்

வழியெங்கும் வரவேற்ப்பு

இன்று(12-05-2006) மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை.

Wednesday, May 10, 2006

128: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்

நேற்று (10-05-2006) அம்மன்,சுவாமி மற்றும் பிரியாவிடை கூட்டாக ஒரே இந்திர விமானத்தில் வலம் வந்து பக்தர்களை பரவச கடலில் ஆழ்த்தினர்.

மூன்று நாள் திருமண விருந்தை முடித்துக்கொண்டு கருட வாகனத்தில் "பவளகனிவாய் பெருமாளும்", மயில் வாகனத்தில் திருபரங்குன்றத்து "தேவானை சமேத சுப்பிரமணியரும்" ஊர் திரும்பினர்.

மேலும் செய்திகளும், படங்களும் தினமலரில் இங்கேயும்,
இங்கேயும்.

நாளை (12-05-2006) அழகர் மலையிலிருந்து கிளம்புகிறார்.

127: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்


இன்று(10.05.2006) காலை சுவாமியும், பிரியாவிடையும் பெரிய தேரிலும் அம்மன் மற்றொரு தேரிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருளினர். அடுத்த படம் தேரில் வீற்றிருந்த அம்மை மீனாட்சி.

126: சித்திரை திருவிழா பத்தாவது நாள்நேற்று (09-05-2006) அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்த காட்சி
இன்று (10-05-2006) காலையில் மஹாதேவா கோஷம் முழங்க தேரில் வலம் வருவர்.

Tuesday, May 09, 2006

125: சித்திரை திருவிழா பத்தாவது நாள்

திருக்கல்யாணத்தின் மேலும் சில படங்கள்.

ஆடிவீதியில் நடந்த கல்யாணபந்தியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கல்யாண விருந்துண்டனர்.

மேலும் திருக்கல்யாண படங்களும் செய்திகளும் தினமலரில்.

124: சித்திரை திருவிழா பத்தாவது நாள்
இதோ அனைவரும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.
இன்று மாலை அம்மன் பூப்பல்லாக்கிலும், அய்யனும் பிரியாவிடையும் யானை வாகனத்தில் மாசிவீதியில் வலம் வந்தருள்வர்.

Monday, May 08, 2006

123: சித்திரை திருவிழா பத்தாவது நாள்

மாணிக்க மூக்குத்தி மரகத மீனாட்சிக்கு திருமணம்.

திருமணமேடையில் ஐயன் பிரியாவிடையுடன் எழுந்தருள்கிறார்.

மேடையில் அன்னை மீனாட்சியின் சகோதரர் பவளகனிவாய் பெருமாள், அம்மனும், அய்யனும், வீற்றிருக்க, திருபரங்குன்றத்து குமரன் தேவானையுடன் காட்சி தருகின்றனர்.


தயார் நிலையில் மணப்பெண் அன்னை மீனாட்சி


மங்கள வாத்தியம் முழங்க, வேத மந்திரம் வின்னை பிளக்க, அன்னை மீனாட்சிக்கு திருமணம் நடந்த காட்சி.

122: சித்திரை திருவிழா ஒன்பதாவது நாள்


நேற்று (08-05-2006) அம்மன் வீர நடை பயின்று அஷ்ட திக்கில் விஜயம் செய்த காட்சி.

இன்று (09-05-2006) காலை 8.26 மணிக்குமேல் 8.50 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம்.

120: சித்திரை திருவிழா எட்டாவது நாள்

நேற்று(07-05-2006) அம்மனுக்கு பட்டபிஷேகம் நடந்து. செங்கோலேந்தி அம்மன் புன்முறுவலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

இன்று (08-05-2006) அம்மனின் அஷ்ட திக் விஜயம்.

Saturday, May 06, 2006

119: சித்திரை திருவிழா ஏழாவது நாள்இன்று(06-05-2006) அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் வலம் வந்தருளினர்

நாளை(07-05-2006) அம்மனுக்கு பட்டபிஷேகம்.

118: நான் ஒரு ராசி....

நான் பிறந்தது சித்திரைமாதம், ஆயில்யம் நட்சத்திரம், நவமி திதியில், ராக்ஷஸ கணத்தில். என்னுடைய 19வது வயதிலேயே, நான் எப்படியெல்லாம் இருப்பேன் என்று நானே கணித்துவிட்ட நிலையில் நான் எங்கு எப்படி இருந்தால் யவர்க்கும் எந்த ஒரு நஷ்டமும் இல்லாமல் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். சித்திரையில் பிறந்தால் அப்பாவிற்க்கு ஆகாது என்பர், நவமியில் பிறந்தால் தனக்காது என்பர், ஆயில்யம் - பயணத்திற்க்கு ஆகாது என்பர், இப்படி எல்லாம் எதுவும் ஆகாத நாளில் நான் ஆனேன் என்று எண்ணுவதுண்டு.

நிற்க. கடந்த நவம்பர் மாதம் என்னுடைய தில்லி அறை நன்பனுக்கு (ரூம் பார்ட்னர்) திருமணமானது, அதை தொடர்ந்து அவரும் மார்ச் மாதவாக்கில் நம்(?) அறையை காலி செய்தார். நானும் புதியவர் ஒருவரை தேடி அலைந்த சமயத்தில் நானிருக்கும் குடியிருப்பிலேயே ஒரு பீகாரை சேர்ந்த ஒரு இளைஞர் தனியாக வசிப்பதாகவும் தம்முடன் என்னை இணைந்து கொள்ளுமாறு கேட்க, வரும் மே மாத முதல் தேதியிலிருந்து வருவதாக வாக்களித்தேன் (எல்லாம் தேர்தல் சமயம் தான்). அவ்வப்போது சந்தித்துக் கொண்டோம். நட்பை பகிர்ந்து கொண்டோம். ஆனால் கடந்த வாரத்தில் எத்தனை முயன்றும் சந்திக்க முடியவில்லை. அவரிருந்த சமயத்தில் நானில்லை, நானிருந்த சமயத்தில் அவரில்லை.

கடைசியாக மே முதல் தேதி காலையிலேயே எழுந்து குளித்து, உணவு தயாரித்து, கடவுளை வணங்கி எப்போதும் வேண்டுவது போல் "எல்லோரும் இன்புற்றுறிக்க வேரொன்றும் அறியேன்! வேண்டேன்!" என்று வணங்கி, பின் 6.50 மணிக்கு அவர் வீட்டு கதவை தட்டினேன். உறக்கம் கலைந்த நிலையில் எழுந்தவர், கதவை திரந்தார். நானோ நீரும், ருத்ராட்சம், சந்தனம் அணிந்து நின்றிருந்ததை பார்த்தவர். வரவேற்று, நலம் விசாரித்தவர், என்னை சந்திக்க அவரும் முயற்ச்சி செய்ததாக கூறினார். அரை மணி நேரத்திற்க்கு பிறகு வந்து பொருட்களை வைத்துக்கொள்ளுமாறு கூறினார். பின் அரை மணி நேரத்தில் எல்லா பொருளும் கட்டியாகி விட்டது, பின் அடுத்த ஒரு மணி 15 நிமிடத்தில் எல்லா சாமானும் இடம் பெயர்ந்தது.

பின் அங்கிருந்து கிளம்பி அலுவலில் மூழ்கினேன் இடையில் வலையில் அன்னையின் தரிசனம், அப்போது ஒரு சின்ன ஞாபகம் இந்த வருடம் என்னோடு இருப்பவர்க்கு சகாயமுண்டு என்று 19வது வயதில் கணித்த கணிப்பு நினைவிற்க்கு வந்தது.

மாலைவேளை, என்னுடன் பணி புரிந்த தில்லி நன்பனொருவனுக்கு திருமணம், தில்லியை அடுத்து ஹரியாணாவில்லுள்ள (தில்லியின் எல்லையிலுள்ள) ஃபரிதாபாத் என்ற மாவட்டத்தில், நிச்சயம் வரவேண்டும் என்று சொன்னது நினைவிற்க்கு வர, நெட்வொர்க்கை ஆரம்பித்தேன். யார்யார் போகிறார்கள் என்று கணிப்பெடுத்து ஒரு வழியாக 6 நன்பர்கள் படைசூழ கிளம்பினோம். வழியில் பரிசுபொருள் ஒன்றை வாங்கி ஒருவழியாக இரவு ஒன்பதரைக்கு மண்டபதிற்க்கு (ஹால்) சென்றடைந்தோம்.

பிறகு மணமக்களை எல்லோரும் சேர்ந்து வாழ்த்தி, பரிசளித்து, உணவருந்திவிட்டு, நகர்ந்தோம். நமக்கு பின் வந்திருந்த என்னுடைய துறை அதிகாரி திரு. ஹிருத்தேஷ் உபாத்யாய் அவர்கள் எங்கள் அறுவரையும் தன்னுடைய காரில் தில்லி எல்லை வரை விட்டு சென்றார்.

அடித்து பிடித்து ஆட்டோவில் பேரம் பேசி மூன்று நன்பர்களும் ஒவ்வொருவராக தத்தமது வீட்டிற்க்கு சென்றோம். நான் காலையில் வீடு மாற்றும் போதே தன்னுடைய ‘ஷூவை’ பாலிஷ் செய்து கொண்டிருந்தார் 'சந்தோஷ்' என்ற என்னுடைய அந்த புது அறை நன்பர். அறையினுள்ளே அவரும் அவருடைய வேரொரு நன்பரும் ஏதோ பேசிக்கொண்டிருதனர். சிறிது நேரத்திற்க்கு பிறகு தமக்கு இன்று காலை வேலை கிடைத்ததாக கூறியதோடு, இன்று காலை இவனுடைய முகத்தில் தான் விழித்தேன் என தன்னுடைய நன்பனிடம் கூறினார். நான் என்னுள் பல முறை நினைத்ததை பிறர் வழியாக கேட்கும் போது சற்று மெய் சிலிர்கிரது, எல்லாம் அவளு(னு)டைய கருணை.

என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்று "வரம் நல்லவனுக்கு தான் கிடைக்கவேண்டும். அப்படி கிடைக்கும் வரம் இவ்வுலகையே காக்கும், உலகம் காக்கப்படும் போது நீயும் காக்கப்படுவாய்" என்று சொல்லி இரு உதாரணங்களையும் சொல்வார்.

1. பிரஹலாதன், ஹிரன்யகசிபுவால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். விஷம் கொடுத்தார்கள், நீரில் எறிந்தார்கள், தீயிலிட்டார்கள், மலையிலிருந்து உருட்டிவிட்டார்கள். துன்பங்களனைத்தையும் மாலவனருளால் வென்று வந்தான் பிரஹலாதன். மலையிலிருந்து உருட்டி விடப்படும் போது மாலவன் ஆணையின் பேரில் பூமாதேவியால் தாங்கப்பட்டு, காக்கப்பட்டார். அப்போது பூமாதேவி வரமருள இசைந்து என்ன வரவேண்டும்? எனக்கேட்க, உடனே பாலகனோ ‘தேவி என் போன்ற சிறு குழந்தைகள் தவறிவிழும் போது அவர்களுக்கும் என் போல் எந்த காயமும் ஏற்படக்கூடாது.’ என்று வரம் கேட்டார். இப்போதும் சிறுகுழந்தைகள் நடக்கும் சமயம் தவறி விழுந்தால் அவர்களுக்கு ஏதும் நேராமல் காக்கிறாள் பூமாதேவி.

2. மன்னன் போஜராஜன் 32 பதுமைகளிடன் விக்ரமாதித்தியனின் கதைகளை கேட்டபடி சிம்மாசனத்தை நோக்கி முன்னேறுகிறான். கடைசி பதுமையிடம் கதை கேட்டு முடிந்தவுடன், அப்பதுமை தங்களது பூர்வீகங்களான அன்னை பார்வதியின் கோபத்திற்க்கு ஆளாகி பதுமைகளாக மாறினோம், என்று சொல்லி, இன்றுவரை தாம் எல்லோரிடமும் கதைகேட்டதால் நம் எல்லோர்க்கும் சாபவிமோசனம் அடைந்தோம். அதற்காக மகிழ்ந்து தங்களக்கு ஒரு வரமும் தரவேண்டும் என்பது தேவியின் கட்டளை, என்று கேட்க, மன்னனும் விக்ரமாதித்தனின் கதைகளை கேட்பவன், சொல்பவன், படிப்பவன், எழுதுபவன் எந்தவொரு குறைவில்லாமல் வாழவேண்டும் என்று கேட்டான்.

இப்படியாக இருப்பதால் இவ்வுதாரணங்களால் கவரப்பட்டு அன்றிலிருந்து நான் இவ்வுலக மக்கள் இன்புற்றுறிருக்க அன்றி வேறொன்றும் வேண்டேன் என்று வாழ்ந்து வருகிறேன். அப்படி அன்றய தின வேண்டுதலே பலித்தது.

சரி அதை ஏன் இன்னக்கி சொல்லனும்? ஒரு வாரம் கழிச்சி, அதுவும் சித்திரை திருவிழா தொடரின் நடுவில்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். முதல் வரி சொன்ன அத்தனை முஹர்த்தங்களும் இன்று தான் வந்தது.

117: சித்திரை திருவிழா ஆறாவது நாள்

நேற்று (05-05-2006) அம்மனும், சொக்கநாதரும் ரிஷப (காளை) வாகனத்தில் எழுந்தருளினர்.

இன்று (06-05-2006) அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் வலம் வந்தருள்வர்.

Friday, May 05, 2006

116: சித்திரை திருவிழா ஐந்தாவது நாள்நேற்று (04-05-2006) அன்னை மீனாட்சியும், சொக்கநாதரும் பிரியாவிடையும் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர்

இன்று (05-05-2006) ரிஷப (காளை) வாகனத்தில் எழுந்தருள்வர்.

Thursday, May 04, 2006

115: சித்திரை திருவிழா நான்காவது நாள்

நேற்று(03-05-2006) அம்மனும், சுவாமியும் பல்லாக்கில் வில்லாபுரத்திலிருக்கும் பாகற்காய் மண்டபத்தில் மண்டகபடி செய்து பக்தர்களுக்கு அருளினர்.

இன்று (04-05-2006) குதிரை வாகனத்தில் எழுந்தருள்வர்.

Wednesday, May 03, 2006

113: சித்திரை திருவிழா மூன்றாவது நாள்


நேற்று(02-05-2006) அம்மை காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை இராவண-கைலாச பர்வதம் வாகனத்தில் வலம் வந்தருளினர்
இன்று(03-05-2006) பல்லாக்கில் பாகற்காய் மண்டபத்தில் மண்டகபடி.

Tuesday, May 02, 2006

112: சித்திரை திருவிழா இரண்டாவது நாள்


நேற்று(01-05-2006) அம்மையும் அப்பனும் அன்னம் பூத வாகனத்தில் வலம் வந்தனர்.
(இன்று காமதேனுவும், இராவண-கைலாச பர்வதம் வாகனத்தில் வலம் வந்தருள்வர்)