Wednesday, December 20, 2006

ஜெய் ஹனுமான்

இப்பதிவு மனற்கேணி பதிவில் வந்த பதிவு. ஸ்ரீமத் ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு இங்கே.

இப்பதிவில் சிவசங்கரனின் அவதாரமான அனுமனை தரிசிக்கிறோம். செந்துரத்தை தன் உடல் முழூவதும் பூசி, ராம காதைகளை கேட்டு கொண்டிருக்கும் அந்த ராம பக்தன் இதோ, தேவ சிற்பி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்டு, ஓரே இரவில் கிடைக்கபெற்ற அனுமனுனின் சிலை, பார்க்கவும் கண்கோடி வேண்டுமே, இதை பதிக்க என் முன்னோர் என்ன தவம் செய்தனரோ.

ஆஞ்சனேயர்

வெற்றிலை மாலை சாற்றியும், எள் விளக்கேற்றியும் வணங்குகின்றனர்.

ஆண்களும்...
பெண்களும்...
குடும்பமாகவும்... குழுக்களாகவும்... இவரை வேண்டுவது சிறப்பு. இவரை ஆஞ்சனேயர் துதி செய்து வலம் வருவோம். இவருக்கு எதிரில் சொக்கநாதரின் பிட்டுக்கு மண்சுமந்த லீலை உள்ளது.
மேலும் சில படங்கள்

அண்ணன் குமரன் எழுதிய கம்பராமயணம் ஸ்லோகம் இங்கே.

நன்பர் ரவிசங்கர் கண்ணபிரானின் (KRS) சிறப்பு பதிவு இங்கே.

Thursday, December 14, 2006

குறும்பு

என்னுடைய பள்ளிவயதில் ஒரு சம்பவம். நான் படித்தது தெப்பகுளம் வ்யூவான (அதாங்க குதுப்வ்யூ, மதுரை டவர் வ்யூ மாதிரி, தெப்பக்குளம் வ்யூ) தியாகராஜர் நன்முறை மேல்நிலை பள்ளியில். மேல்நிலை பள்ளியின் முதல் வகுப்பான ஆறாம் வகுப்பில் சேரும்போது அது அதைவிட மேலாக என்னுடைய வக்குப்பறை அத்தெப்பகுளத்தை பார்த்து ரசிக்கும் வகையில் கொண்ட சில வகுப்பறைகளில் இரண்டு வகுப்பறைகள் ஆறாம் வகுப்பிற்க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வகுப்பில் யாரேனும் ஆசிரியர் வரவில்லையெனில் வகுப்பு தலைவன் முன்னால் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொள்வான், யாரும் பேசக்கூடாது, பேசினால் நம்முடைய பெயரை கரும்பலகையில் எழுதி வகுப்பாசிரியரிடம் காண்பித்து நம்முடைய "கிரேஸை" குறைப்பான் அல்லது "அ(இ)டி" வாங்கி தருவான். சில சமயம் வகுப்பாசிரியர் நல்ல மனநிலையில் இருந்தால் தப்பித்தோம், இல்லை தொலைந்தோம்.

எல்லாம் நமக்குன்னே வந்து சேரும் என்று அடிக்கடி வடிவேலு சொல்வாரே அது போல அவ்வருட நமது அறிவியல் ஆசிரியைக்கு ஏதோ நோய் வந்து பல நாட்கள் ஓய்வுவிடுப்பில் இருந்தார். காலாண்டு பரிட்ச்சைக்கு பிறகு வரவேயில்லை. வேறு ஒருவரை அரையாண்டு பரிட்ச்சைக்கு ஒரு வாரத்திற்க்கு முன் கூடுதலாக பணியமர்த்தினர்.

அதுவரை சுமார் இரண்டு மாதம் குறும்புகளுக்கு பஞ்சமில்லை, புக் கிரிக்கெட் விளையாட்டு, சினிமா அந்தாக்ஷரி என்று உட்கார்ந்தபடி விளையாடப்படும் புதுப் புது விளையாட்டுக்கள் நடந்தது, நடந்தது, நடந்துகொண்டே இருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் பசங்க சமத்தா இருக்காங்க என்று சொல்ல தோன்றும். ஒரு சில பெயர்களை அவ்வப்போது தலைவர் பலகையில் எழுதுவதால் (யாருப்பா அது என் பெயர் இருந்திச்சான்னு கேட்பது) அவ்வளவாக சத்தம் வருவதில்லை. அமைதியாகவே "அமர்ந்திருப்போம்". குறும்பு என்னமோ ஓடிக்கொண்டிருக்கும்.

விளையாட்டுக்காக ஒரு சிறிய நோட்டு புத்தகம் போட்டு ரஜினி படம் எல்லாம் எழுதிவைத்து அதை விளையாடும் போது பயன்படுத்துவது (அதாங்க சினிமா அந்தாக்ஷரி). ஒரு நடிகரின் படமா சொல்லிட்டே போகனும், அவன்(ர்) சொல்ல, இவன்(ர்) சொல்ல என்று என்னோட முறை வரும் போது ஒரு பக்கம் முடிந்து விடும். பக்கத்தை திருப்புவதற்க்குள் ரெஃபரி டைம் அவுட் என்பான். கடுப்பாகிவிடுவேன். இவ்வளவு உழைத்தும் விணானதே என்று நினைப்பேன்.

பிறகு, ஆங்கில வார்த்தைகளை கொண்டு அந்தாக்ஷரி செய்யவேண்டும் என்று நன்பர்கள் கேட்க விளையாட ஆரம்பித்தோம். சிறிய வார்த்தை கூட சில நேரங்களில் வராது. சொன்ன வார்த்தைகளை சொல்ல கூடாது என்று ஏகத்திற்க்கு கும்மாளம் தான்.

ஆனால் அந்த இருமாதத்தில் சில வகுப்புகள் பிற ஆசிரியைகளால் களவாடப்பட்டு சமூக அறிவியல் பரிட்ச்சையோ, வகுப்பாசிரியரின் சிறப்பு வகுப்போ, விளையாட்டு அல்லாத ஏதாவது ஒரு வகுப்பு ஓடும் அப்போதெல்லாம் குறும்பு "வாலை" பின்னி பினைத்து அமர்ந்து ஆதரவு கொடுப்பர் நம் ஆருயிர் சகாக்கள்.

சில வார்த்தை விளையாட்டுக்கள் அல்லது வார்த்தை கச்சேரி, உள் விளையாட்டறங்க விளையாட்டல்லாத அமர்ந்து ஆடும் விளையாட்டுக்கள் என்று நன்றாக இருந்தது அந்த "கனாகாலம்".

சிறு வயது பையனிடம் சிலவற்றை எதிர்பார்க்க முடியாது அதில் முதன்மையானது உண்மை – ஏதாவது இல்லை என்றால் தொலைந்து விட்டது என்று பதில் (நீயும் தொலைய வேண்டிய தானே). ஏதாவது பரிட்சை மார்க் குறைந்தால் மறந்து விட்டேன் என்று பதில் வரும் (அப்படியே ஞாபகம் இருந்துட்டாலும் வெட்டி முறிச்சிரப் போற) அல்லது வினாதாள் சரியில்லை (என்னிக்கு நீ சரியா இருந்திருக்க?) என்று பதில் வரும் இப்படி தான் போகுமே தவிர உண்மை வருமா என்றால் சொற்பமே.

ஏன் தான் இப்படி பொய் சொல்றோமோன்னு நாமே காரணம் தெரிந்து கொள்வதற்க்குள் ஓஷோ சொன்னது போல் "நீ உன் தந்தையை மதிக்க கற்பதற்க்குள், உன்னை மதிக்காத ஒரு ஜீவன் இவ்வுலகில் வந்து விடுகிறான்". என்ற உண்மையான வாசகம் நினைவில் ஆழ்த்தும். இது போல் பிரச்சனைகளல்லாத பலவற்றை செய்து விட்டு திரும்பி பார்க்கும் சமயம் (ஆனந்த) கண்ணிர் வரவழைக்கும் செயல் தான் குறும்பு :).
_/\_ நன்றி.

Saturday, December 09, 2006

குறும்பு

ஆன்மீக குறும்பு
ஆன்மீகத்தில் குறும்பு என்று தனியாக ஒரு பெரிய வலை பூவே செய்யலாம், எல்லாம் அந்த பேரருளான் ஒரு நாடக தானே. அவன் செய்யும் நாடகங்கள் சற்று சந்தோஷம் செய்ய வைக்கிறது, சற்று அதிகமாக திக்கு முக்காடவைக்கிறது, சில சமயம் அதை உரசி பார்க்க எத்தனிக்கும் போது வரும் ஒரு வித சங்கடமமும் என்று எல்லாம் ஒரு வித்யாசமாக ஏற்படுவதும் ஒரு விதமான ஆன்மீக குறும்பு தானே.

ஆன்மீக குறும்பு பற்றி எழுதும் போது யாருடைய குறும்பை முதலில் இடுவது என்று ஒரு பெரிய போராட்டமே நடந்து விட்டது. பகவான் ரமணரின் குறும்பை சொல்லி மாளாது. சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
ஒரு முறை அவரை பார்க்க இந்தியாவிற்கான ஒரு வெளிநாட்டு தூதர் வந்தார். அவர் இருந்த நிலையை கண்டு சற்றே ஏளன செய்த அவர் என்னிடம் ஏதாவது கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்றார். எப்போதும் இது போன்ற மகான்களிடம் நம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வோம் ஒருவர் தம்மிடம் வந்து கேட்க்கும் போது கசக்கவா செய்யும். (ஆராரோ ஆரிரோ படத்தில் பானுப்பிரியா கேட்பது போல்) சரி ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்படி கேட்டார் “நீ யார்?”. எத்தனை பெரிய கேள்வி ஆன்மீகத்தில் கொட்டை போட்டவர்களே பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி. புத்த மதத்தில் இந்த கேள்வி தான் முதலில் விடை காணும் இலைக்கை(task) தருவர் அதிலேயே அவருடைய பாதி ஆயுள் முடிந்து விடும். நம் தூதர் சொன்னார் “நான் ஆல்பர்ட் வில்ஸ்மன்” என்றார், அதற்க்கு “அது உங்களுடைய பெயர்”. “நீ யார்?”. “நான் அம்பாஸிடர் (தூதர்)”, அது உங்களது பதவி”, “நீ யார்?” என்று மீண்டும் கேட்டார் அவரும் பல பதில்கள் சொன்னார் தன் மனைவியின் கணவன் என்றார் அது ஒரு உறவு என்றும், தன் தந்தையின் மகன் என்றார், இன்னும் எத்தனையோ பல பதில் சொன்னார், அதில் இருவரும் திருப்தி அடையாமல் இருந்தனர், கடைசியில் ஆல்பர்ட் மகரிஷியின் காலில் விழுந்து எனக்கு தெரியவில்லை நீங்களே சொன்னால் கேட்டு கொண்டு சந்தோஷ படுவேன் என்றார். அதற்க்கு அவர் “அதை தேடி தான் உலக மக்கள் ஓடுகின்றனர். சிலர் இருக்கும் சூழலையே நம்பி அமர்ந்து விடுகின்றனர் சிலர் திருப்தியில்லாமல் ஓடுகின்றனர். அந்த ஓட்டம் உள்ளவரை உலகம் சுற்றிக் கொண்டிருக்கும். இது தான் ரகசியம்.” என்று சொல்லி முடித்தார். ஆல்பர்ட் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவேஇல்லை.

என்னுடைய குருநாதர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜோக்கிற்க்கு கூட ஒரு பெரிய இடம் தந்திருப்பார். அவர் நடத்தும் வகுப்புகளில் நிச்சயமாக ஒரு ஜோக் இருக்கும், யோகா வகுப்பில் என்ன ஜோக் என்று நினைக்க தோன்றும் ஆனால் பாருங்க ஹாஸிய யோகம் என்று அதையும் ஒரு யோகமாக மாறிவிட்டது. தமது வகுப்புகளில் இது போன்ற நகைச்சுவை சம்பவங்களுக்காவே “சங்கரன் பிள்ளை” என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். சங்கரன் பிள்ளை செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. இதை பற்றி அவருடைய ஆனந்த விகடனில் வந்த மற்றும் வருகின்ற தொடர்களான “அத்தனைக்கும் ஆசைப்படு” மற்றும் “உனக்காவே ஒரு ரகசியம்” போன்ற தொடர்களில் நீங்கள் காணலாம். ஒரு சின்ன சாம்பிள்.

எதையும் அளவோடு செய்ய வேண்டும் என்று சொல்வதற்க்காக சத்குரு சொல்லும் ஒரு சங்கரன் பிள்ளை சம்பவம். ஒரு முறை சங்கரன் பிள்ளை தன் மகனை அழைத்துக் கொண்டு எவ்வளவு சாராயம் குடிக்கலாம் என்று உனக்கு தெரியவில்லை அதை உனக்கு சொல்லி தருகிறேன் என்று சாராய கடை நோக்கி சென்றார். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். இரு முறை ஏதோ ஒரு பானத்தை குடித்த சங்கரன் பிள்ளை தன் மகனிடம் மிகவும் நிதானமாக “இதோ பார் குடிப்பதும் ஒரு கலை, எப்போது நிறுத்த வேண்டும் என்றால் அதோ அங்கே தெரியும் இருவர் எப்போது நால்வராக உனக்கு தெரிகிறதோ அப்போது குடிப்பதை நிறுத்தி விட வேண்டும்”. அவருடைய மகனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரும்பி பார்த்தான் ஆனால் அங்கே ஒருவர் தான் அமர்ந்திருந்தார். உடனே தன் தந்தையை அழைத்துக்கொண்டு அக்கடையை விட்டு வெளியேறினான்.
இது போல் பல கதைகள் வரும் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு நீதியோ அல்லது போதனையோ பொதிந்திந்திருக்கும்.

இந்திய வரலாற்றில் குறும்புக்கு பேர் போனவர் என்று கேட்டால் கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் இருந்த தெனாலி ராமன் முதலில் நினைவுக்கு வருவார். விகடகவி என்று என்ற அழைக்கப்பட்ட கோபத்தின் உச்சமாம் அந்த காளியையே சிரிக்க வைத்த அந்த விகடனின் குறும்பு ஒன்று இரண்டல்ல, அனேகம், எதையோ செய்து வேறு எதையோ உணர வைப்பதில் தெனாலி ராமனுக்கு நிகர் தெனாலி ராமனே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று உணர்ந்தவன் ராமன். எல்லாரும் எல்லாமும் பெருவதில்லை அதே போல் ஒருவரிடத்தில் ஒன்றும் இல்லாமல் இருந்து விடுவதில்லை என்று உணரவைப்பதற்க்கு அவை முக்கிய மந்திரி அப்பாஜி என்றோ, மாமன்னர் கிருஷ்ணதேவ ராயர் என்றோ, அல்லது வெளிமனிதர்களோ என்ற எந்த பேதமும் தெனாலி ராமனுக்கு இருப்பதில்லை.
இக்கரையில் குறும்பு செய்து உணரவைப்பது தெனாலி ராமன் என்றால் அக்கரையான அமீரகத்தில் அதே போல் முல்லா நஸ்ருதீன்.இவரும் குறும்பு குறைவில்லாதவர். தம் மனதில் உள்ளதை அப்படியே பிறரிடம் சொல்பவர். எதற்க்கும் எந்த பேதமும் பாராதவர்.
இன்னும் சற்று பின்னோக்கி சென்றால் ஆன்மீகத்தில் – அரசியலில் குறும்புகளை கண்டோமானால் கண்ணனின் குறும்பு பேர் போன இதிகாச குறும்பு. குழந்தையாக் மண்ணை தின்றதாகட்டும், வாயை திறந்து ஈறேழு லோகத்தை காட்டியதாகட்டும், வெண்ணை திருடி தின்றதாகட்டும், தயிர் பானைகளை உடைத்தது, பாவமாய் தன் தாயிடம் ஒன்றும் அறியாதவன் போல் நடித்ததாகட்டும் என்று இன்னும் எத்தனை எத்தனை லீலைகள் எத்தனை எத்தனை படிப்பினைகள் எல்லாம் அனுபவிக்க ஒரு பிறவி போதாது, அதை அனுபவித்து எழுதியவர்களின் எழுத்துக்களை படிக்க ஏழு பிறவிகளும் குறைவே. கண்ணனும் வளர்ந்து பிறகும் ஜராசந்தனை கொல்லும் சமயம் குறும்பாக பீமனுக்கு சமிக்ஞை செய்வதாகட்டும் பாரத போர் என்று வந்த பிறகு அர்ஜுனனை காக்க சூரியனையே மறைத்ததாகட்டும் என்று அவனது குறும்பிற்க்கு ஒரு அளவே இல்லை. இத்தனை அரசியல் குறும்புகள்(தந்திரங்கள்) செய்து தர்மத்தை நிலை நாட்டினார்.

தமிழ் வேதமான திருக்குறளில் வரும் சில நகைச்சுவையை பற்றி படிக்கும் சமயம் திருவள்ளுவரும் குறும்பிற்க்கு சில உதாரணங்களை சொல்லி தமது இடுக்கணழியாமை என்ற அறுபத்து மூன்றாவது அதிகாரத்தில் கஷ்டகாலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துள்ளார். மேலும் மக்கட் செல்வம் செய்யும் குறும்புகளை காண தாம் செய்த தவம் என்று சொல்லி குறும்பு வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்று அடித்து சொல்கிறார்.

அப்பேற்பட்ட குறும்புகள் நம் இளைய தலைமுறையினர் மத்தியிலும், சினிமாவிலும் எப்படி புரள்கிறது என்பதை அடுத்த பதிவில்.

Thursday, December 07, 2006

குறும்பு

கலைவாணர் என்.எஸ்.கே. குறும்பிற்க்கு பெயர் போனவர். அவர்போல் குறும்பு செய்தவர்கள் குறைவு என்று சொல்லமுடியாது. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சமயம் அவர் ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் வேண்டுதலின் பேரில் தோசைக்கு சக்கரை தருவது வாடிக்கை. ஆனால் போர் காரணமாக அன்று முதல் தோசைக்கு சக்கரை தருவதில்லை என்று என்.எஸ்.கே. சாப்பிட்ட ஓட்டல் நிர்வாகம் முடிவெடுத்து ஒரு அறிவிப்பு பலகையில் “இன்று முதல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று அறிவிதிருந்தது.

இருந்தாலும் கலைவாணர் சர்வரிடம் தான் கேட்ட தோசையுடன் சக்கரை வேண்டுமென கேட்டார். அப்போது சர்வர் சற்றே ஆனவமாக போர்டை பார்க்கும் படிகேட்டுக் கொண்டார். உடனே கலைவாணர் மேலும் ஒரு தோசை ஆர்டர் செய்தார். அந்த தோசை வரும் வரை காத்திருந்து. அந்த தோசை வந்தவுடன் அதற்க்கு சக்கரை கேட்டார். மறுபடியும் அதே ஆனவத்துடன் பலகையை காட்டினார் சர்வர். அதை பார்த்து எங்கே படி என்றார் “இது வேறயா என்று முணுமுணுத்த சர்வர் படித்தார். என்ன சொன்ன “இன்று முதல் தோசைக்கு சக்கரை கிடையாது தானே”, இது முதல் தோசையல்ல இரண்டாவது தோசை என்று கேட்டார். அவ்வளவு தான் வயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு முதல் காரியமாக பலகை வாசகத்தை “இனி மேல் தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றினார். அவ்வளவு தான் இதற்காகவே காத்திருந்தவர்போல் சர்வரை தன்பக்கம் அழைத்து இரண்டாவது தோசைக்கும் சக்கரை கேட்டார்.மேலும் கீழூமாக பார்த்த சர்வர் மீண்டும் பலகையை காட்ட முன் போலவே படிக்க சொன்னார். சர்வர் படித்தார். என்ன சொன்ன “இனி மேல் தோசைக்கு சக்கரை கிடையாது தானே”, மேல் தோசைக்கு தானே சக்கரை கிடையாது நான் கீழ்தோசைக்கு தான் சக்கரை கேட்கிறேன் என்று சொல்ல மீண்டும் வயடைத்து போன சர்வர் சக்கரை கொடுத்து விட்டு பலகை வாசகத்தை “தோசைக்கு சக்கரை கிடையாது” என்று மாற்றி பலகையை ஒளித்து வைத்தார். கலைவாணர் சென்ற பிறகு அதை வாயிலில் மாற்றினார்.

கலைவாணரின் இந்த வார்த்தை ஜால குறும்பும், அவரது சிரிக்கவைத்து சிந்திக்க வைக்கும் திறனும் தான் நம்முடன் இன்றும் அமரராக வைத்திருக்கிறது.

Sunday, December 03, 2006

குறும்பு

குறும்பு என்ற வார்த்தையை கூட ஒரு குறும்பா சொல்லி பாருங்க அதுல வர்ர குசும்பே தனி. இது போன்ற ஒரு குறும்பான ஒரு தொடக்கத்தை இந்த மாதத்தில் வருடத்தில் நினைவில் இருந்ததையும் மேலும் சில கற்பனை கலந்து ஒரு குறும்பான வாரமாக்கலாம் என்று நினைத்தேன் பதிக்கிறேன்.

குறும்பு என்றால்...

குறும்பு என்ற சொல்லின் குறுகிய கால கட்டத்தில் இன்பத்தை வரவழைத்து, குறுகிய காலத்தில் நினைவில் நின்று வாழ்க்கை முழுவதும் அவ்வப்போது நினைவில் வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சிறு சம்பவம் குறும்பு என்று சொல்லியிருப்பார்களோ!

குறும்பின் விளைவு...

ஆரம்பத்தில் அதை பார்த்து சிரித்து, பின் அதையே ஒரு நிகழ்வாக கருதி மறக்க நினைத்து கடைசியில் எப்போதோ எங்கோ அதே போல் ஒரு சம்பவம் நடக்கும் போது மீண்டும் நம் மனதை ஆக்ரமிப்பது குறும்பின் விளைவு.

குறும்பின் வகை...

சிறில் அவர்கள் பல வகைகளை சொல்லியிருந்தார். மேலும் சில வகை

சிறுவர்கள் செய்வது அறியாகுறும்பு
வாலிபர்கள் செய்வது விஷமக்குறும்பு
உறவுக்குள் செய்வது கலாட்டாகுறும்பு
நட்ப்புக்குள் செய்வது தினக்குறும்பு

மேலும் பழமொழி குறும்பு, வியாபர குறும்பு, அரசியல் குறும்பு, கல்லூரி குறும்பு, வயோதிக குறும்பு, சமயோசித குறும்பு என்று பல நிலைகளில் குறும்பின் தன்மை மாறினாலும் குறும்பின் தாக்கம் மாறுவதில்லை. இரண்டு நிமிடம் கண்களை மூடுங்கள் எத்தனையோ எண்ணங்கள் வரும் அதில் அதிகபட்சமாக உங்களை சிரிக்கவைத்த குறும்பு சம்பவங்கள் வராமல் இருக்காது.இது போன்ற சம்பவங்கள் சமயத்தில் சிரிக்க வைத்து நம்மை பைத்தியமோ என்று பிறரை எண்ண வைத்துவிடும்.

குறும்பு என்று தேன்கூட்டில் டிசம்பர் மாத தலைப்பை கொடுத்தாலும் கொடுத்தார்கள் இனி புதிதாக ஒரு போட்டி குறும்பு என்று உருவாக காத்துள்ளது. பலவகையான எழுத்துரு செயலிகளை கொண்டு நம் பதிவுலக நண்பர்கள் குறும்பிட ஆரம்பித்து விட்டனர். எல்லாம் அடுத்த 15-20 நாட்களுக்கு தான் என்று எண்ணும் போது கலங்கினாலும், மேலும் சில வலை நன்பர்கள் எப்போதும் போல் குறும்படித்து கொண்டிருப்பார்கள். பிறகு சில வாரத்தில் இயல்பு நிலை(?) திரும்பி பல சிடுசிடுக்கும் விஷயங்களை அலச தயாராய் உள்ளனர். ஏதோ சிறில் அவர்கள் புண்ணியத்தில் அடுத்த சில தினங்களுக்கு குறும்புக்கு குறைவிருக்காது என்று நம்பலாம். இப்புதிய முயற்ச்சியில் பல புதிய நட்பு மலரட்டும், பழய நட்பு பலமாகட்டும் அவரவர் உட்நட்புகள் பிறரோடு பலமாகட்டும் அவர்தம் நட்பை இணைக்கும் பாலமாகட்டும்.

அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசர் ஒரு வாசகம் சொன்னார். தற்போது விஞ்ஞானம் நிலவில் காலடி வைத்து விட்டது. ஆனால் அதில் பயணிக்கும் வின்வெளி வீரன் முதலில் சர்ச்சுக்கு சென்று விட்டு தான் பிறகு வின்கலத்திற்க்கு செல்கிறான் என்றால் ஆன்மீகத்தில் எதோ ஒரு பிடிப்பு இருக்க தான் செய்கிறது. நானும் அதையே செய்கிறேன்.

ஆன்மீகத்திலும் பல குறும்புகள் உள்ளன அதை பலர் தமது சொற்பொழிவிலும், பல கட்டுரைகளிலும் கையாண்டிருப்பார்கள். திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்களும்,தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களும், இளசை சுந்தரம் அவர்களும், முனைவர் ஞானசம்பதம் அவர்களும் மேலும் பல அறிஞர்களும் சொல்லியிருப்பதை கேட்டு, படித்து இருப்போம். அடுத்த பதிவில் ஆன்மீக குறும்பையும், மேலும் சில குறும்பு பதிவுகளும் இவ்வாரத்தில்.