Thursday, May 18, 2006

138: மண்டூக மகரிஷி

சித்திரை திருவிழாதொடரில் என்னார் அவர்கள் மண்டூக மகரிஷி பற்றி சற்று விவரிக்க சொன்னார்..

ஹிந்து சனாதன தர்மத்தில் காரணகாரியமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற திடமான நம்பிக்கை உள்ளவன் நான். மனம் ஒரு தவளையாக மாறி, தன்னை சுற்றி ஒரு பெரிய மதிலை உருவாக்கி அதற்க்குள்ளே வாழ்ந்து வருபவர்களை கண்டு வாழவும் கற்றுக்கொண்டு விடுகிறது, அதிலிருந்து மீண்டு உலகின் அனைத்தின்பங்களை சுகிக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல பகவான் தான் எத்தனை எத்தனை லீலைகளை புரிகிறார். அதில் ஒன்று தான் மண்டூக மகரிஷிக்கு மோக்ஷமளிப்பது. மண்டூகஹ என்றால் வடமொழியான செங்கிருதத்தில் (சமஸ்கிருதம்) மூடன் என்ற பொருளும், தவளை என்ற பொருளும் கொண்ட ஒரு சொல்.
சுதபஸ் என்ற முனிவர், கடம்பவன காட்டில் ஆஸ்ரமம் அமைத்து தவமியற்றி வந்தார். சதா சர்வகாலமும் பெருமாள் நினைவிலேயே இருப்பார், எப்போது பெருமாள் வருவார், இத்தனை நாட்களில் வருவார், பெருமாள் வருவார், என்று அனுதினமும் அவருக்கு பூஜை செய்வார் இப்படியே காலம் கடத்தி கொண்டிருந்தார். அதனால் ஒரு குருக்குரிய, தவசீலருக்குரிய சாதனைகளை, தவங்களை, நித்ய கடன்களை செய்ய தவறினார். கடன்களை செய்ய தவறுபவன் தன் இஷ்ட பக்தனாக இருந்தாலும் அவனை திருத்துவது பகவானது கடமையன்றோ!. ஆகவே, சுதபஸை திருத்த ஒரு தக்க தருனத்திற்காக காத்திருந்தார்.

ஒருநாள் அப்படியே தமது பேரானந்த நினைவுகளில் மூழ்கியிருந்த வேளையில் அவரது ஆஸ்ரமத்திற்க்கு கோபமுனி என்று பெயர் பெற்ற துர்வாசர் வந்தார், அவர் வந்ததை சுதபஸ் கவனிக்கவில்லை பெருமாள் நினைவிலேயே மூழ்கியிருந்தார். விருந்தாளியாக வந்தவரை கவனிக்கவில்லை என்று கோபங்கொண்ட துர்வாசர் அங்கே ஆஸ்ரமத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்த சுதபஸை நோக்கி ‘சுதபஸ்! ஆஸ்ரமத்திற்க்கு வரும் அதிதியை எவ்வாறு வரவேற்க்க வேண்டுமென்று தெரியாத மண்டு. மண்டூகமாக கடவது!’ என்று சபித்தார். ஈசனே தன்னை ஆழ்பவன் என்ற நினைவுகளை கொண்ட துர்வாசரின் வாக்கு பலித்தது, சுதபஸ் தவளையாக மாறினார். மாறியவர் சுயநினைவிற்க்கு வந்து தாம் செய்த பிழைக்கு மன்னிப்பு கோரி சாபவிமோசனத்திற்க்கு வழிகேட்டார். அப்போது சுந்தராஜபெருமாளை கருடாருட வாகனத்தில் காணும் போது விமோசனம் பெருவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். வைகுண்டத்திலிருக்கும் கருடாருட சுந்தர மூர்த்தியை வையகத்தில் தவளையாயிருக்கும் தனக்கெப்படி கிட்டும் என்று கேட்க. ஸ்ரீ ஆண்டாள் மாலை பெற சைத்ர பௌர்ணமியில் சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் கோலங்கொண்டு வருவார் அவ்வமயம் அடுத்தநாள் கருடாருட வாகனத்தில் கடம்பவன காட்டின் வடபகுதியிலிருக்கும் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் அங்கே பல ஜீவராசிகளுக்கும் காட்சியளிப்பார் அன்றே சுதபஸ் நீ விமோசனம் பெற்று பழைய நிலை அடைவாய் என்றார். அதுவரை மண்டூக மகரிஷி என்று பெயருடன் இதே வைகை நதிக்கரையில் பகவானின் நினைவுடனும் இன்ன பிற நித்யகடன்களை செய்தும் வாழ்ந்து வருவாய் என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.

அத்தீர்கதரிசியின் சொல்படி அழகர் மலையிலிருக்கும் சுந்தராஜர் கள்ளழகர் கோலத்துடன், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை பெற்று. வீரராகவ பெருமாளின் வரவேற்ப்பை ஏற்று, பின் அம்மாலையை அணிந்து ஆற்றில் இறங்குகிறார். மறுநாள் தேனூர் மண்டபத்தில் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் காணதுடித்து கண்டும் விட்ட திவ்ய தரிசனமான (‘திடவ் கன் கெருடோரவி தேவ் கிருப கரய் கரய்’-என்றால் கருட வாகனத்தில் வந்து பெருமான் காத்தருள்வான்) கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோக்ஷமளிக்கிறார்.

ஸ்ரீ மந்நாயகி சுவாமிகள் ஒரு வரகவியாவார், தாம் பார்த்த ஒரு பொருளோ, ஒரு காட்சியோ அதன் மேலும் ஒரு கவிபாடி அதிலும் பெருமானையே காண்பார். அப்படி அழகர் பரிமேல் வரும் அழகை கண்டு அவர் பாடிய பாடல்.

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா
பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா
சிறியேன் படும் துயரை அறியாயோ - செங்கண்மால்
ஹரியே உன்திருவடியே அடியேற்கு துணை

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

கண் பாராய் அழகா கருமமற
கண் பாராய் அழகா
கண் பாராய் எந்தன் கவலையொழிந்திட
விண்மண் அளந்த திருவடியுடைய விமலா

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

துணையார் எனக்கழகா தொண்டுகொள்வாய்
துணையார் எனக்கழகா
துணையார் எனக்கு உந்தன் இணையடியல்லால் ஆயர்
மனைதோறும் புகுந்து வெண்ணை உண்டவாயா

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

கடைத்தேற்றும் அழகா கருணைவைத்து
கடைத்தேற்றும் அழகா
கடைத்தேற்றாய் என்னை காலன் கையிலாடாமல்
இடையர்குலம் உய்வித்த நடனகோபாலா!

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா

4 comments:

குமரன் (Kumaran) said...

மண்டூக மகரிஷி கதையை நன்றாகச் சொன்னீர்கள் சிவமுருகன். கொடுத்துள்ள நாயகி சுவாமிகளின் பாட்டும் மிகப் பொருத்தம்.

சிவமுருகன் said...

நன்றி குமரன் அண்ணா.

செல்வன் said...

kathai nalla irukku sivamurukan.ivarai parri naan ithuvarai keelippattathee illai.theriyaatha vishayaththai inru therinthu kolla mutinthathu.nanri.

(computerla tamil fonts illai.mannikkavum)

anbudan
selvan

சிவமுருகன் said...

மிக்க நன்றி செல்வன் சார்.

//therinthu kolla mutinthathu.nanri.//

என்னார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் சொல்லி தான் இந்த பதிவை பதித்தேன்.