சிவ சங்கரன், நாராயணனின் பக்தனாக, தொண்டனாக, தூதனாக இருந்து, இன்றும் அவர் புகழ் பாடி வரும் ராம பக்தன், ருத்ர அவதார அனுமான். இவரை பற்றி நான் பல பதிவுகளில் சொல்லி இருந்தாலும் மேலும் சில கருத்துக்கள் இங்கே.
சிவன் ஊர்வனவாக(பாம்பாக), மிருகமாக(பன்றியாக),கோபங்கொண்ட மனிதனாக(வீரபத்திரர்), மதியூக மானிடனாக(விறகு விற்று, வளையவிற்று, மானிக்கம் விற்று), செய்த திருவிளையாடல்கள் பலப்பல, இவரே வானரமாக அவதரித்த திருவிளையாடல் தான் அனுமான் என்று விளங்கும் வானவீரன் பஜ்ரங்க பலி.
ரகுகுல நந்தன் இராமர், இலங்கேஸ்வரன் இராவணனை வதம் செய்ய பல தேவர்கள் துணை புரிந்தனர், சூரிய பகவான் சுக்ரீவனாக, இந்திரன் அங்கதனாக(வாலி மைந்தன்) என்று எல்லா தேவலோகத்தவரும் இணைந்து இராமனை நடுநாயகமாக, கதையின் நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நாடகம் தான் இராமாயணம்.
அதில் முக்கிய அம்சமாக பல இடங்களில் கதாநாயகனையே விஞ்சும் அளவிற்க்கு அற்புதங்கள் செய்த, பாரதத்தின் முதல் வெற்றி வீரனாக, ஆகாய சூரனாக, வானரவீரனாக, வாயுபுத்திரனாக, கேஸரி நந்தனாக, அஞ்சலி புத்திரன் ஆஞ்சநேயன், அனுமனாக இறைவன் சிவசங்கரன் அவதரித்தது இந்த அவனியிலே. இவரையும் அனைத்து தேவர்களும் தங்களால் இயன்ற வரமளித்து இவரை மேலும் வலிமையடைய செய்தனர். ‘பிரமதேவர்’ ‘பிரம்மாஸ்த்திரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றும் குபேரன் வலிமையுள்ள கதாயுதத்தை வழங்கியும், இந்திரன் வஜ்ராயுதத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பல தேவர்கள் இவருக்கு வரமளித்தனர்.
அனுமனுக்கு சிறு வயதில் பாடம் சொல்லி தந்தவர், சூரிய பகவான், இதன் மூலம் தமது இராம கடமையை இருபங்கு அதிகமாக செய்தவராகிறார். மேலும் ‘சொல்லின் செல்வரான’ ஆஞ்சனேயர் எல்லா கலைகளிலும், எல்லா மொழிகளிலும் தேர்ச்சி பேற்றவர், துளசிதாசரிடம் இந்தி மொழியில் இராமயணத்தை இயற்ற சொல்லும் போது, மக்களுக்கு விரைவில் புரியும் வண்ணம் ‘தோஹா’ என்ற குறள் வடிவில் இயற்றும் படி வேண்டுகிறார். அதே போல் அவரும் இயற்றும் சமயம் முதலில் சம்ஸ்கிருதத்தில் 10 குறளடிகளை துதிக்களாக பாட, அனுமன் அவசரப்பட்டு என்ன “நீங்களும் சமஸ்கிருதத்தில்?” என்று கேட்க அதுவும் “அனுமான் உவாச” என்று அதில் வரும், பின் இந்தியில் “தோஹா” வடிவில் இராமாயணத்தை இயற்ற எல்லாம் சுபமாக முடிந்தது. அக்காவியம் இன்றும் அழியாக் காவியமாக, “துளசிதாஸ் ராமாயண்” என்று பல இடங்களில் போற்றி பேசப்பட்டு வருகிறது.
மஹா விஷ்ணுவின் அவதாரமான இராமருக்கு கூட இல்லாத விஸ்வரூப தரிசனம் அவரது பக்தனுக்கு இருப்பது மேலும் பெருமை சேர்ப்பது.
சங்கரனை நிந்தித்த பாவமும், நாரயணனை நிந்தித்த பாவமும் தீரமுடியாத பாவங்களாக உள்ளன. அத்தகைய பாவங்களுக்கு ஆளானப்பட்டவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் / விரதம் “சபரிமலை யாத்திரை”.
இவ்விரதம் ஹரி-ஹர இருவரின் அம்சகளாக ஆரியங்காவு அய்யனான, தர்ம சாஸ்தா இருப்பதால், இருவரையும் நிந்தித்த பாவம் இவரை வழிபடுவதாலும், சபரிமலை யாத்திரை செய்வதாலும் அப்பாவங்கள் தீரும் என்று உணர்த்தப்பட்ட விரதம் சபரிமலை விரதம்.